டில்லி

த்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராமதாஸ் அதுவாலே பாஜக தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதி உள்ளார்.

பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் இந்தியக் குடியரசுக் கட்சியும் ஒன்றாகும்.  இந்த கட்சியின் தலைவர் ராமதாஸ் அதுவாலே மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.    இவருடைய கட்சி உத்திரப் பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இயங்கி வருகிறது.

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்தன.   இந்த கூட்டணிக்கு மிகவும் பாடுபட்ட ராமதாஸ் அதுவாலேவின் கட்சிக்கு எந்த ஒரு மக்களவை தொகுதியும் ஒதுக்கவில்லை.  இது ராமதாஸ் அதுவாலேவுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

இது குறித்து ராமதாஸ் அதுவாலே பாஜக தலைமையகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்  அந்த கடிதத்தில் ”எங்கள் கட்சிக்கு தலித் மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.  நாங்கள் அனைவரும் மோடியின் கடின உழைப்பை மிகவும் ஆதரிக்கிறோம்.   அவர் மீண்டும் பதவிக்கு வர நாங்கள் எங்கள் உழைப்பை அளிக்க தயாராக உள்ளோம்.

ஆனால் எங்களுக்கு மகாராஷ்டிர மாநில கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை.  பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைக்க நான் மிகவும் பாடுபட்டேன் என்பது எனது தொண்டர்களுக்கு தெரியும்.  ஆனால் எனக்கு அந்த கூட்டணியில் தொகுதி ஒதுக்கவில்லை.   இந்த கூட்டணி மீண்டும் இது குறித்து பரிசீலித்து எங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் என நம்புகிறேன்.

தற்போது எனக்கு உத்திரப் பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்   உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தலித் மக்கள் ஓட்டு அதிகம் கிடைக்காமல் இருக்க எனது கட்சி பாடுபடும்.  அதைப்போலவே அசாம் மாநில  முதல்வர் சர்பானந்தாவிடமும் நான் எங்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளேன்.  அந்த மாநிலத்திலும் தலித்துகள் ஆதரவு எங்களுக்கு உண்டு.

ஏற்கனவே பாஜக தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதாக பலரும் கூறி வருகின்றனர்.  இந்நிலையில் எனக்கு உத்திரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தில் எங்கள் கட்சிக்கு  நாங்கள் கேட்ட அளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனில் எனது கட்சியின் தலித் தொண்டர்கள் எங்களை அங்கீகரிக்கவில்லை என நினைப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜகவை சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவர், “அதுவாலேவைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.  ஆனால் பாஜக தலைமை எந்த ஒரு கூட்டணி கட்சியையும் அதிருப்திக்கு உள்ளாக்காது” என தெரிவித்துள்ளார்.