
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுவதாக கூறப்பட்ட து. இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாமக தலைவர் அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “ அய்யா ராமதாஸ் நேற்று மாலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில், ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, இதில், அவரது இதயத்துக்கு செல்லும் ரத்துக்குழாய்களில் அடைப்புகள் இல்லை. அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என இதய சிகிச்சை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர் ஏற்கனவே எடுத்து வரும் மாத்திரைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர் என்றார்.
நீங்கள் ராமதாசை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, அவர் ஐசியுவில் இருப்பதால் பார்க்க முடியவில்லை. 6 மணி நேரம் ஐசியுவில் இருப்பார் அதன்பின்னர் சாதாரண அறைக்கு மாற்றப்படுவார். அதன்பிறகே அவரை சந்திக்க முடியும் என்றவர், ராமதாஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தேன்” என்றார்.