சென்னை : வார விடுமுறை மற்றும் ரமலான் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சனி, ஞாயிறு வார விடுமுறையுடன், திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகையும் வருவதால், அன்றைய தினமும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னை உள்பட நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரமலா ன் விடுமுறையையொட்டி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் 31 வரை போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும், 29-ம் தேதி 530 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 990 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல, வரும் 31-ம் தேதி சென்னைக்கும் இதர ஊர்களுக்கு 890 சிறப்பு பேருந்துகள்இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூருக்கு வரும் 28-ல் 100 சிறப்பு பேருந்துகளும், வரும் 29-ல் 95 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மாதவரத்தில் இருந்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 31-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .
இவ்வாறு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.