நியூயார்க்: அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், ராமர் மற்றும் அயோத்தியில் கட்டப்படவிருக்கும் ராமர் கோவிலின் முப்பரிமாண தோற்றத்தை வரும் ஆகஸ்ட் 5ம் தேதி திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, ஆகஸ்ட் 5ம் தேதி நடத்த அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் கொண்டாட்டம் குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் பொது விவகார குழுவின் தலைவரான ஜெகதீஷ் செஹானி கூறுகையில், “ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நியூயார்க்கில் கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்விற்காக மாபெரும் நாஸ்டாக் மற்றும் 17,000 சதுர அடி பிரமாண்ட எல்இடி டிஸ்பிளே திரையை குத்தகைக்கு எடுத்துள்ளோம்.
ஆகஸ்ட் 5ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற சொற்களின் படங்கள், ராமரின் உருவப்படங்கள் மற்றும் வீடியோக்கள், கோயிலின் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலைகளின் முப்பரிமாண உருவப்படங்கள் மற்றும் அஸ்திவாரம் அமைக்கும் படங்கள் விளம்பர பலகையில் திரையிடப்படும்” என்றார்.