புதுடெல்லி: தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு பாரதீய ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ்.

அவரின் இந்தக் கருத்து, அக்கட்சிக்கு கிடைக்கவிருக்கும் தோல்வியை ஓரளவு வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக கருதப்படுகிறது.

அக்கட்சியின் முக்கியத் தலைவரான அருண்ஜெட்லி மற்றும் கட்சியின் தலைவர் அமித்ஷா ஆகியோர் வேறுவிதமாக கூறிவந்த நிலையில், ராம் மாதவின் கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது. தனித்து ஆட்சியமைப்பதற்கு சிறிது இடங்கள் குறைந்தாலும், கூட்டணியாக ஆட்சியமைப்பதில் சிக்கல் இருக்காது என்றுள்ளார் ராம் மாதவ்.

மேலும், வடக்கு மாநிலங்களில் ஏற்படும் இழப்பை, கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் மாநிலங்களில் கிடைக்கும் கூடுதல் இடங்களை வைத்து சரிகட்டி விடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சியில் அமரும்போது, பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்வோம் என்றும், ஜனரஞ்சக கவர்ச்சி திட்டங்களின் மேல் கவனம் செலுத்தமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.