2018ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’ராட்சசன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’ராக்‌ஷஸுடு’ 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மா கதை, திரைக்கதை, இயக்கத்தில் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளது. சாகர் மற்றும் ஸ்ரீகாந்த் விசா வசனங்கள் எழுதுகின்றனர்.

ஜிப்ரான் இசை, வெங்கட் சி திலீப் ஒளிப்பதிவு என முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தில் பணியாற்றவுள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த சத்யநாரயணா கோனேருவே இதையும் தயாரிக்கிறார்.

இயக்குநர் ரமேஷ் வர்மா செவ்வாய்க்கிழமை இதற்கான போஸ்டரை வெளியிட்டார். அதில் கசாப்பு கடைகளில் பயன்படுத்தப்படும், ரத்தம் தொய்ந்த கத்தி சங்கிலியில் தொங்குவது போலவும், கோட் அணிந்த உருவம் ஒன்று பிணத்தைத் தூக்கிச் செல்வது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.