டில்லி: பதவிக்காலம் முடிவடையும் 72 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு இன்று ராஜ்யசபாவில் வழியனுப்பு விழா, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெறுகிறது.
ராஜ்யசபாவில் தற்போது எம்.பி.க்களாக பதவி வகித்து வரும் 72 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல், , ஜூன் மற்றும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் முடியவடைய உள்ளது. ஏழு நியமன எம்.பி.,க்கள் மற்றும் பா.ஜ., காங்., உள்ளிட்ட பிற கட்சி எம்.பி.,க்கள் என, 72 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த எம்.பி.க்களுக்கான வழியனுப்பு விழா, இன்று நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்தி பேச உள்ளனர். இதனால், ராஜ்யசபாவில் இன்று பூஜ்ய நேரம், கேள்வி நேரம் ஆகியவை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. வழியனுப்பு விழா முடிந்த பின், துணை ஜனாதிபதியின் இல்லத்தில் எம்.பி.,க்களுக்கான விருந்து மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே பதவிக்காலம் முடிந்து, நினைவு பரிசு பெறாத 19 முன்னாள் எம்.பி.,க்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.