சென்னை; மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக சார்பில் போட் டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தர்மர் தர்மர் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அதிமுக எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதையடுத்தும் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாகும் 57 எம்பிக்கள் இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாநிலங்களவை எம்பி தேர்வாவதற்கும் 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி திமுக 4 இடங்களுக்கும், அதிமுக 2 இடங்களுக்கும் போட்டியிடுகிறது. திமுகவுக்கு கிடைத்துள்ள நான்கு இடங்களில் 3ல் திமுகவும், ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சியும் ஒதுக்கி உள்ளது. திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 12 மணி அளவில், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் சென்னை தலைமைச் செயலத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை, கார்த்தி சிதம்பரம் உள்பட மூத்த தலைவர்கள், திமுக சார்பில், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி. சண்முகம், தர்மர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின் போது எதிர்கட்சி தலைவர் ஈபிஎஸ். துணை தலைவர் ஓபிஎஸ்., வேலுமணி, முனுசாமி உடன் இருந்தனர்.
தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி, மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. போட்டி இருக்கும்பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ஆம் தேதி நிறைவடையும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.