சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.  இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி  நேற்று (30ந்தேதி) பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இதில் திமுக சார்பாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோரும்,  காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும், 7 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 ஆம் தேதி ஆகும்.

மாநிலங்களை இடங்களுக்கு போட்டியிடுபவர்கள் வேட்புமனுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிந்து இருக்க வேண்டும். அவ்வாறு உறுப்பினர்கள் முன்மொழியாமல் தாக்கல் செய்த சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் பரிசிலீனை அன்று நிராகரிக்கப்படும்.

இதையடுத்து  திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.