சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும்,  திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை தாக்கல் செய்தனர்.

 தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ந்தேதியுடன் முடிவடைய நிலையில், அந்த இடங்களுக்காக தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியுட்டது. அதன்படி ஜூன் 2 முதல் ஜுன் 9ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், 10ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 12ம் தேதி வேட்பு மனு வாபஸ் வாங்கலாம்.  இதையடுத்து, தேர்தலில் போட்டி ஏற்பட்டால்,  ஜுன் 19ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த தேர்தலில்,   திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 உறுப்பினா்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து திமுக, அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி,  திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும்,  கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அக்கட்சித் தலைவர் கமலஹாசனும் போட்டியிடுகிறார். இதனையடுத்து, திமுக சார்பாக போட்டியிடும் இவர்கள் நால்வரும் பேரவை கூடுதல் செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மநீம தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.