சென்னை,
வரும் மே 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி. ரஜினி ரசிகர்கள் என்பது ஒரு தனி இனம். என்னதான் ரஜினியை பார்ப்பதே பெரும்பாடாக இருந்தாலும், சென்னை வந்து ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தையாவது தரிசித்துச் செல்வார்கள். “எப்படியும் “தலைவர்” அரசியலுக்கு வருவார்” என்ற கனவை இன்னமும் சுமந்துகொண்டிருப்பவர்கள்.
ரஜினிக்கு என தனி மவுசு அவரது ரசிகர்களிடையே உண்டு. அவர் அதை நேரம் பார்த்து உபயோகப்படுத்திக்கொள்வதில் கைதேர்ந்தவர்.
ஏற்கனவே கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை செய்யப்போகிறேன் என்றும், போட்டோ எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்று அறிவித்த ரஜினி கடைசி நேரத்தில் ஜகா வாங்கினார்.
இந்நிலையில் தற்போது வரும் 15ந்தேதி முதல ரசிகர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.
முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் உள்ளிட்ட 17 மாவட்ட ரசிகர்களை சந்திக்க இருக்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 200 முதல் 250 ரசிகர்களை மட்டுமே சந்திக்க இருப்பதாகவும், இரண்டாவது கட்டமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர்களை, ஜூன் மாதம் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக சென்னை வரும் ரசிகர்கள் காலை 7 மணிக்கே கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராக வேந்திரா மண்டபத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து காலை 9 மணி அளவில் மண்டபத்துக்கு வரும் ரஜினி, ரசிகர்களுடன் போட்டோ மட்டுமே எடுத்துக்கொள்வார் என்றும், ஆலோசனையோ, கலந்துரையாடலோ கிடையாது என்றும் ஒரு தகவல்கள் கூறுகிறது.
ரஜினியை சந்திக்கும்போது, அவருக்கு மாலைள் அணிவிப்பது, பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது போன்று எந்தவித மரியாதையும் செய்யக்கூடாது என்றும், குறிப்பாக எக்காரணம் கொண்டு காலில் விழக்கூடாது என்றும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஜினியின் பாதுகாப்பை முன்னிட்டு, அவரை சந்திக்கும் ரசிகர்களின் போட்டோ, முகவரியுடன் கூடிய ஐடி கார்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுபோல டூப்ளிகேட் கார்டுகள் தயாரிக்க முடியாத வகையில் பல்வேறு நுணுக்கங்களுடன் கார்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கார்டு கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே ரஜினியை சந்தித்து போட்டோ எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.