வ.ர.மே. : 5,  வந்தேறி என்ற சொல் சரிதானா…? –  நியோகி

ர்நாடகத்தில் பிறந்த ரஜினிகாந்தை தமிழ்நாட்டை ஆளச் சொல்லி அழைப்பதா…? அப்படியெனில், தமிழர்களை வேறொரு மாநிலத்தில் ஆள விடுவார்களா…? என்றெல்லாம்  கேட்கப்படுகிறது !

கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அந்தக் கேள்விகளில் பொருளில்லை…

தமிழ்ப் பேராசான திருவள்ளுவர் உலகுக்கெல்லாம் அருளிச் சென்ற திருக்குறளில்… கேள்வி அதிகாரத்தில்… 417  ஆவது குறளைப் பார்ப்போம் :

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து

ஈண்டிய கேள்வி யவர்.

தமிழாசான் திரு. இரா. சாரங்கபாணி அவர்கள் இந்த குறளுக்கு இவ்வாறாக விளக்கம் சொல்கிறார்…

“பொருட்களை நுட்பமாக ஆராந்தறிந்ததோடு, செவி செல்வம் மிகுதியாகப் பெற்றவர்கள் கற்றவற்றை தவறாக அறிந்தாலும், பிழைபட பேசி விட மாட்டார்கள் “

அதாவது, தான் தவறாக அறிந்த பிழையை கேள்வி செல்வம் திருத்தி விடும் என்கிறார் !

இவர், தமிழின் ஆழமாங் கடலில் நீந்திக் களித்த தெ.போ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஔவை துரைசாமிப் பிள்ளை போன்ற மகா ஞானஸ்தர்களிடம் பயின்றவர் என்பதனால் அவரது பொழிப்புரையை அப்படியே ஏற்றுக் கொள்வது நமக்கு நலம் பயக்கும் !

வள்ளுவர் என்ன சொல்கிறார்…? ஒரு விஷயத்தை தவறாக உணர்ந்து கொள்வது மானுட இயற்கையே ! ஆனாலும் அதை, பிழைபட பேசிவிடக் கூடாது ! அதற்கு முன் பலரிடமும் விவரம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் !

கேட்டுக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையில் தொடர்வோம்…

திரு. ரஜினிகாந்த் பிறந்த இடம் பெங்களூரு ! அவர் வாழ வந்த இடம் சென்னை!

அவரை “வந்தேறி” என்று சொல்லும் திரு. சீமான் அவர்கள் பிறந்த இடம் அரணையூர் ! அவர் வாழ வந்த இடமும் சென்னை !

சென்னைக்கும் – பெங்களூருக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 346 கிலோ மீட்டர். சென்னைப் பட்டிணத்துக்கும் – அரணையூருக்கும் இடைப்பட்ட தூரமோ 458 கிலோ மீட்டர் !

திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும் – அவரை வந்தேறி என்று சொல்பவருக்கும் இடையே சரியாக 112 கிலோமீட்டர் இடைவெளி ! அதாவது  தமிழ்நாட்டின் தலைநகரத்துக்கு, அருகாமையில் இருப்பது திரு. ரஜினிகாந்த் அவர்கள் பிறந்த ஊரே !

எனில், யாரை இங்கே வந்தேறி என்று சொல்வது..?

சென்னைக்குப் பிழக்க வருவது தவறா…? தவறேயில்லை ! எல்லோரும் பிழைத்திருக்கத்தான் இந்த நாடு ! சொல்லப் போனால், எல்லோரது உழைப்பாலும் பிழைத்திருப்பதுதான் இந்த நாடு !

ஆனால், ஒன்றுபட்டு வாழும் மாந்தர்களிடம் இரண்டகம் செய்யப் பார்க்கும் போதுதான் சிக்கல்.

ஒன்றிணைந்த தமிழ்நாட்டில்… மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து வாழ்வது பிழையில்லை யென்றால்….ஒன்றுபட்ட இந்தியாவில்… மாநிலம் விட்டு மாநிலம் வந்து வாழ்வதும் பிழையல்லவே..!?

நாடு விட்டு நாடு வந்து ஆக்ரமிப்பு செய்த முகலாயர்களையும் – ஆங்கிலேயர்களையும் கேடு கெட்டவர்கள் என்று ஆசை தீர திட்டித் தீர்க்கும் நாம்…

கூடவே, “எங்கள் தமிழன் ராஜராஜ சோழன் உலகையே ஆண்டான்…தெரியுமா..? என புகழ்ந்துரைக்கிறோமே…?. தனக்கென்றால் ஒன்று பிறர்கென்றால் ஒன்று என்று நியாயம் சொல்லி விட முடியாதல்லவா..?

ராஜ ராஜனின் மூன்று வகையான மெய்க் கீர்த்திகளில் ஒன்று இது :

“ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.”

அதாவது, ஸ்ரீ ராஜ ராஜ தேவராகப்பட்டவர்… மதுரையை அழித்தார். கொல்ல தேசம், கொடுங்கோளூர் போன்றவற்றை அடிமைக் கொண்டார். கடல் கடந்த மன்னர்களையும் சிரபிடித்து அவரது படைகளை தன் பரிவாரங்களாக்கிக் கொண்டார் என்றெல்லாம் ஏற்றிப் போற்றுகிறோம்.

போகட்டும் அது அரசர்கள் ஆண்ட காலம். போரெடுத்துப் போவது அரச தர்மங்களில் ஒன்று ஆகவே, “கோ நெறிக் கொண்டு கோலோச்சினார்கள்”  எனக் கொண்டேற்றுக் கொள்ளலாம்.

ஆனால், இன்றோ ஜனநாயகக் காலம். இதில் மக்களே மன்னர்கள்.

மன்னர்களாகிய மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே முதலமைச்சர்  ஆக முடியும். அவர் எந்த மொழி, எந்த மாநிலம் என்று பார்க்கத் தேவையில்லை !

எந்த மொழி பேசுபவரும் – எந்த மாநிலத்திலும் இருந்து ஆளலாம் என்று நமது அரசியல் சாசனம் தீர்க்கமாக சொல்கிறது.

“அரசியல் சாசனம் என்ன அரசியல் சாசனம்….? அதைத் தூக்கி உடப்பில் போடு….” என்றெல்லாம் சொல்லி விட முடியாது. அப்படிச் சொல்வது சட்டப்படிக் குற்றம் ஆகும்.

“என்னோடு சேர்ந்து கொண்டு நீ சேவை செய் ; நான் ஆண்டு கொள்கிறேன்…” என்பது, “ நீ உழைத்து சம்பாதித்துக் கொடு; நான் வேண்டுமானால் உட்கார்ந்து சாப்பிடுகிறேன்….” என்பது போல்தான் இருக்கிறது !

வேற்று மொழி பேசுபவர்கள், தமிழ் நாட்டை ஆள்வது தவறு என்று சொல்பவர்கள் அடிப்படையில் ஒன்றை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

முதலமைச்சர்தான் ஆதி முதலாக அந்தம் ஈறாக ஆள்கிறார் என்று எண்ணிக் கொண்டிருப்பதால் வரும் மாயை இது. உண்மையில், ஆள்வது எல்லாம் துறை சார் அதிகாரிகளே. அவர்களை வழி நடத்துவது மட்டுமே முதலமைச்சர். பாலிசி டெஸிஷன்கள் எடுப்பது முதலமைச்சரும், அவரது அமைச்சரவைதான் என்றாலும் கூட, எந்த பாலிஸிகளையும் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாக யாரும் எடுத்துவிட முடியாது !

முதலமைச்சர் தமிழராக இருந்தால் தானே தமிழருக்கு சாதகமாக வழி நடத்துவார் என்று வாதிடுவதே தவறு. காரணம், ஓர் தமிழர் முதலைமைச்சராக வந்தால், அவர் தமிழரல்லாதவர்களுக்கு பாதகமாக செயல்படத்தான் முனைவாரா என்னும் கேள்விக்கு அது இட்டுச் சென்று விடக் கூடும் !

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது அவரது முடிவில்தான் இருக்கிறது. அல்லது அவர் சொல்வதுபோல ஆண்டவன் கையில் இருக்கிறது. ஆனால், அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

காரணம், இன்று இருக்கும் சூழ்நிலையில்… தேர்தல் வந்தால், தனியாக நின்று அறுதிப் பெரும்பான்மை பெறும் சக்தி யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை.

தொங்கு சட்டசபை அமைவதுபோலதான் ஓட்டுக்கள் பிரிந்து நிற்கும்.

ஒருவேளை கூட்டணி அரசாங்கம் அமைந்தால் என்னவாகும்…?

ஆளாளுக்கு ஒரு கொள்கைகளை சொல்லி அதை நடைமுறைப்படுத்தா விட்டால், ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று பயமுறுத்திக் கொண்டே இருகும் சூழல் ஏற்படும். ஒவ்வொரு அமைச்சரும் மூன்று கட்சிக்காரர்களால் சூழப்பட்டு விரட்டப்படுவார். எனக்கு வேலை கொடு அவனுக்குக் கொடுக்காதே எனும் கூச்சல்களால் ஒவ்வொரு இலாக்காவும்  சந்தைக் கடையாய் மாறி நாறும் !

அதிகாரச் சண்டையில் எல்லோரும் இப்படி அடித்துக் கொண்டிருந்தால்… மக்களுக்கு சென்று சேர வேண்டிய ரிசோர்ஸ்கள் எல்லாம் மறைமுகமாக சூறையாடப்படும். இந்த நாடு, தாழ்ந்த தமிழகமாய் தரங்கெட்டுப் போகும் !

இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்..?

இது நல்ல தருணம். படித்த இளைஞர்கள் சமுதாய அக்கறையோடு திரும்ப எத்தனிக்கும் நேரம். அவர்களுக்கு, “தெனாலி ராமனின் சூடு பாலைப் போல” இன்றைய அரசியலை அராஜக ரூபமாகக் காட்டி விரட்டி விட்டு விட்டால்…பின்பு இந்தப் பக்கமே திரும்பாமல் போய்விடுவார்கள்.

அவர்களை நல் வழியில் ஒருமுகப்படுத்தி சமுதாயத்தை நோக்கி இறக்கி விட வேண்டிய அற்புதமான காலகட்டம் இது. அதை முன்னிட்டாவது திரு.ரஜினிகாந்த் அவர்கள் களம் இறங்க வேண்டும்.

மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து…

ஓட்டுக்கு காசு – இலவச ஏமாற்றுதல்கள் – இரட்டை இலை எங்க தாத்தா போட்ட  சின்னம் – காங்கிரஸுக்குப் போடுவது எங்க பரம்பரைப் பழக்கம் போன்ற அபத்தமான எண்ணங்களிலிருந்தெல்லாம் பாமர மக்களை மீட்டெடுத்து, அவர்களை நெறிப்படுத்தி, குறைந்த பட்சம் ஓர் ஐந்தாண்டுக் காலம் பழக்கி விட்டு விட்டால் போதும். அதனால் ஏற்படும் நன்மைகளை ஒருமுறைக் காட்டி விட்டால் போதும். பிறகு, அதை அப்படியே பிடித்துக் கொண்டு விடும் இந்த சமூகம்.

இந்த புண்ணிய காரியத்தை செய்து முடிக்கத்தான் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறேன்.

சினிமாவில் இருந்து வருபவர்கள் அரசியலில் இறங்குவதா…?? என்று கேட்பதில் விவேகமில்லை. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, சினிமாவை எட்டிப் பார்க்காத அரசியல்வாதிகள் இங்கே யார்…? சினிமா என்பது என்ன தீட்டுப்பட்ட இடமா…? அதிலிருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா…? விவரமில்லாமலா இத்தனைக் கோடி மக்களை, இத்தனை ஆண்டுக் காலம், எண்டர்டெயின் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினியின் பாப்புலாரிட்டியைக் கண்டு அச்சப்பட்டுக் கொண்டு, அந்த அச்சத்தை வெளியே காட்ட கூச்சப்பட்டுக் கொண்டு, அதற்கு வேறு ஏதேதோ பெயரிட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திரு.ரஜினிகாந்த் அரசியலில் இறங்கினால்… அதைக் களத்தில் சென்று எதிர்க்கலாமே தவிர, அரசியல் பாதையில் இறங்கவே கூடாது என அவரைத் தடுப்பதும் – இனம் மொழி பேதம் பேசி எச்சரிப்பதும் ஜனநாயகமாகாது. மத்திய, மாநில உள்துறைகளும் –  நீதிமன்றங்களும் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது.

மகாகவி பாரதியார், பாஞ்சாலி சபதத்தில் சொன்னது போல…

“தன்னைத்…

தின்ன வருமோர் தவளையைக் – கண்டு

சிங்கஞ் சிரித்தருள் செய்தல் போல்…”

திரு.ரஜினிகாந்த் அவர்கள், இதனையெல்லாம் எளிதாகக் கடந்து அரசியலில் இறங்கியே விடுவார் என்றே தோன்றுகிறது.

(தொடரும்…