முடியுமா? முடி உதிராமல் தடுக்க முடியுமா? : டாக்டர் த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி. (டி.இ.ஆர்.எம்.), டி.டி. 

ந்த கேள்விக்கு பதில் காணும் முன்  நாம் முடியைப் பற்றிய  அறிவியலை காண்போம்.  முடி வேர் ஒரு உயிர்த் தொழிற்சாலை. முடி வாழ்நாள் வரை வளர்ந்து கொண்டே இருக்கும்.

தலையில் ஒரு லட்சம் முடி வேர்கள் உள்ளன. இவற்றில், குறிப்பிட்ட சமயத்தில்  70% -90% முடிவேர் வளரும். மீதி உள்ள 10%-30% முடிவேர் வளராமல் தோலில் அடியில்  இருக்கும்.

ஒரு முடி மாதம் 1செ.மீ வளரும். ஒரு முடி, 2 முதல் 6 வருடம் [24-60 செமீ] வரை வளரும். பின்னர், முடி கொட்டி விட்டு முடிவேர் மட்டும் 3 மாதம் தோலின் அடியில் ஓய்வு எடுக்கும்.  இதை முடி சுழற்சி எனலாம். ஒரு தலை முடி அதன் வாழ்நாளில் 10 முதல் 20 முறை சுழற்சிக்கு உட்படும். ஒரு நாளைக்கு ஏறத்தாழ 50 முடி விழும். சில காலகட்டத்தில் முடி விழுதல் அதிகமாக இருக்கலாம்.

15 வயதில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 500 முடி இருக்கும். ஐம்பது வயதில் ஒருசதுர சென்டி மீட்டருக்கு 200 முடி மட்டுமே இருக்கும். அதாவது வயது ஆக முடி அடர்த்தி குறைவது இயல்பே. சுருக்கமாக இரட்டை சடையில் ஆரம்பித்து’பாப் கட்டிங்கில் முடி, முடியும்.

தோலின் வழியாக எண்ணெயோ, தண்ணீரோ ,ஷாம்புவோ ஊடுருவ முடியாது. எனவே தண்ணீரால் ஷாம்புவால் முடி உதிராது.  அதே போல் எண்ணெய்யால் முடி வளராது’ ஒரு மருந்தை தோலின் அடியில் உள்ள முடி வேருக்கு அனுப்புவது சிரமம்.

திடீர் என முடி பயங்கரமாகக் கொட்டுகிறதே… திடீரென சொட்டையாகவிடுவேனோ என்ற கேள்வியுடன் சிலர் வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு சிகிச்சைக்கு தேவைப்படாது.

ஏன் என்று பார்ப்போம்.

முன்பே கூறியது போல் தலையில் 1லட்சம் முடிவேர் உள்ளன. . இவற்றில் 70%முதல் 90% முடி வேர் வளரும். 10-30% முடி வேர் வளராமல் ஓய்வு எடுக்கும். ஒரு முடி 2முதல் 5வருடம் வரை வளர்ந்து,விழுந்து 3 மாதம் ஓய்வு எடுத்து பின் வளரும்.

உதாரணமாக ஒருவருக்கு சென்ற வாரம் 90% முடி வளர்ந்தது என்றும் இந்த வாரம் 89% முடி வளர்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரண்டிற்கும் வேறுபாடு 1%தான். ஆனால் இது 1லட்சத்தில் 1% என்று பார்க்கும் போது1000 முடியாகும்.  ஆகவே முடி சில வாரங்களில் அதிகமாக உதிர்வதைப் பற்றி பொதுவாக கவலைப்படத் தேவையில்லை. உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு ஓரிரு மாதம் கழித்து முடி கொட்டுவது அதிகரிக்கலாம். இதுவும் சத்தான உணவு வகைகளை உண்டால் சரியாகிவிடும்.

இன்னொரு விசயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

முடி வளரும் அளவும் ஓய்வு எடுக்கும் அளவும் அவ்வப்போது மாறுபடும். சில சமயம் தினம் 100 முடி வரை உதிரவும் வாய்ப்பு உள்ளது. இது ஒருசில  வாரங்களில் அல்லது  மாதங்களில் தானாகவே சரியாகி விடும். சிகிச்சைக்கு அவசியம் இருக்காது.

முடி அடர்த்தியை கூட்டுவதற்கான சிகிச்சை பலன் தெரிய, குறைந்தது 3-6 மாதங்கள் ஆகும். எனவே ஒரு சில வாரங்களில் முடி கொட்டும்போது, முடி வளர்வதற்காக தேவையின்றி செலவு செய்யாதீர்கள். பயமும் வேண்டாம்.

பெண்களுக்கு நீண்ட நாட்கள் முடிஅதிகமாக கொட்டுவதற்கான முக்கிய காரணங்கள்..

இரும்புசத்துக் குறைபாடு,தைராய்டு பிரச்சனை, பாலிசிஸ்டிக்ஒவரி மற்றும் ஒரிரு மாதம் முன் உடல் நிலைசரியின்மை  ஆகியன ஆகும்.

1] இருப்புச்சத்து குறைபாடு 50% இந்திய பெண்களுக்கு உள்ளது. எனவே முடி அதிகமாக கொட்டினால் இரத்த சோகை உள்ளதா என பரிசோதனை செய்வது அவசியம். இந்த குறைபாடு உள்ளவர்கள் தலையில்  மருந்து தடவுவதற்கு செலவு செய்யாமல், இரத்த அபிவிருத்திக்கான உணவு வகைகளையும் இரும்பு சத்து மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டும். சாப்பாட்டிலும் புரதசத்து உள்ள காய்கறிகள்,  முட்டை, மாமிசம், மீன் சோயா,கொண்டகடலை,பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

முட்டை உடைத்து தலையில் ஊற்றிக் கொண்டால் முடி வளராது. துர்நாற்றமே வரும்!  முட்டையில் புரதசத்தும் முடிவளர தேவையான  பயோட்டின் விட்டமினும் உள்ளன. முட்டையை பச்சையாக வேகவைக்காமல் உடைத்து வாயில் ஊற்றிக் கொண்டால் பயோடின் விட்டமின் இரத்தத்தில் சேராது.  உடற்பயிற்சி செய்யும் பயில்வான்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

2  தைராயிடு குறைபாடு உள்ளவர்களுக்கும் முடி கொட்டும். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு தைராயிடு குறைபாட்டால் வரும் அறிகுறிகள் தென்படாது.இவர்களுக்கு இரத்த பரிசோதனை மூலம் எளிதாக கண்டறியலாம்.

3] பாலிஸ்டிக் ஓவரி [polycystic ovary]  உள்ள வர்களுக்கும் முடி கொட்டும். இதற்கான  அறிகுறிகள்;

குண்டாக இருத்தல்,  மாதவிடாய் சுழற்சி சரிவர இல்லாமை, முகப்பரு அதிகமாக இருத்தல், கழுத்து கருப்பாக இருத்தல், முகத்தில் முடி வளருதல் போன்றவை ஆகும்.  இதற்கு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமான உணவும் உடற்பயிற்சி குறைவும் ஆகும்.

இவர்கள் காய்கறிகளை “உணவாக” உட்கொண்டு சோறு, கோதுமைகளை “தொட்டுக் கொண்டு” சாப்பிட வேண்டும். உடற்பயிற்சியும் மிக அவசியம். இவர்களுக்கு வரும் ஒவ்வொரு நோய் அறிகுறிகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவரை கண்டால் சொத்து தான் குறையும். உடல் எடை குறையாது.

4] நிறைய பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால்[அம்மை, டைபாய்டு,பெரிய அறுவை சிகிச்சை, அல்லது குழந்தை பிறந்து ஒரு சில  மாதம் கழித்து) அளவுக்கு அதிகமாக முடி கொட்டும். இதற்கு காரணம் நிறைய முடிவேர்கள் ஓய்வு நிலைக்கு தள்ளப்படுவதுதான்.

இதை ஆங்கிலத்ிதல்  [Telogen effluvium என்று சொல்வோம்.  இது தானாகவே சரியாகி விடும். இதற்கு சிகிச்சை தேவையில்லை.

அடுத்து  பொடுகு ஏற்பட காரணம்,   அதற்கான தீர்வுகளை பார்ப்போம்.

(தொடரும்)