வெற்றியின் அளவுகோல் வருமான வரி!

10. முறையீடு – சட்டப்படி நிவாரணம்.

ஒரு கேள்வியுடன் தொடங்குவோம்.

இந்தியாவில் சட்டங்கள் எளிமையாக இருக்கின்றனவா…?

‘ஆமாம்’ என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.

நன்கு படித்தவர்கள் கூட, படித்தவுடன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகக் கடினமான நடையில்தான் அனேகமாக அத்தனை சட்டங்களுமே இருக்கின்றன.

யாருக்கும் எளிதில் புரிந்து விடக் கூடாது என்று திட்டமிட்டு மிகக் கவனத்துடன் இவ்வாறு செய்யப் பட்டு இருக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது.

வருமான வரிச் சட்டமும் அப்படித்தான்.

ஓரிரு வரிகளில் முடிகிற வாக்கியங்களைக் காணவே முடியாது. எந்த ஒன்றையும் எப்படி நீட்டி முழக்கி சுற்றி வளைத்துச் சொல்வது என்பதற்கு இந்தச் சட்டம் ஒரு நல்ல உதாரணம்.

சட்ட நடைமுறைகளை எளிமையாக்குகிற பணி, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான்வ ருகிறது. எல்லா அரசுகளுமே இதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.பாராட்டுக்கு உரிய விஷயம்.

அதேவேளையில், சட்ட நடைமுறைகள் அளவுக்கு, சட்டங்களை எளிமையாக்குவதில் போதுமான கவனம் செலுத்தப் படுவதில்லையோ என்கிற ஐயம் எழுகிறது.

ஒரு சட்டம், ஏன் இத்தனை கரடு முரடான மொழியில் இருக்க வேண்டும்…?

சிறிய சிறிய வாக்கியங்களில், யாருக்கும் எளிதில் புரிகிற நடையில் ஏன் இருக்கக் கூடாது…?

இவ்வாறு மாற்றி அமைப்பதில் என்ன சிக்கல் அல்லது பிரசினை..?

அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட யாருமே இது குறித்து ஏன் வாயே திறப்பதில்லை…?

விடை காண முடியாத புதிர்.

சட்டங்கள் எளிமையாக இருக்கின்றனவா..?

இல்லை.

அதே சமயம்,

சட்டங்கள் சாமான்யனுக்கு சாதகமாக இருக்கின்றனவா..?

மிக நிச்சயமாக ஆமாம். இந்தியாவில் சட்டங்கள் எல்லாமே சாமான்யனுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன.

நம்ப முடியவில்லையா…?

சாமான்யனுக்கு பாதகமாகத்தான் சட்டங்கள் இருக்கின்றன என்று தோன்றுகிறதா…?

திரைப்படங்கள் ஏற்படுத்தி வைத்து இருக்கிற எதிர்மறைச் சிந்தனை இது.

திரைப்படங்களுக்கு எழுதுகிறவர்கள், சட்டம் தெரிந்தவர்கள் அல்ல; மாறாக, கைதட்டல் பெற வேண்டும்; மக்கள் ஆதரவு பெற வேண்டும் என்பதற்காக ‘ரூம் போட்டு’ யோசிக்கிறவர்கள். இவர்கள் வேறு எப்படி எழுதுவார்கள்..?

இத்தகைய ‘சிந்தனையாளர்கள்’ எழுப்புகிற கூச்சல்தான் சமுதாயத்தை நிரப்புகிறது. பிறகு எப்படி, சட்டம் பற்றிய சரியான மதிப்பீடு நம்மிடம் தோன்ற முடியும்…?

இந்திய நீதித் துறையின் மிகச் சிறந்த அம்சமே அது வழங்குகிற ‘முறையீடு’ வாய்ப்புகள்தான். எத்தனை தீவிரக் குற்றவாளியாக இருந்தாலும், நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப் பட்டதாகத் தீர்ப்பு கூறி தண்டனை வழங்கினாலும், அதனை எதிர்த்து முறையீடு செய்கிற உரிமையை சட்டம் எல்லாருக்கும் வேறுபாடின்றி அனுமதிக்கிறது.

முறையீடு மட்டுமல்ல; முறையீட்டில் ஒரு வேளை நீதி வழங்கப்பட வில்லை என்று கருதினால், முறையீட்டுத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யலாம்.

வழக்கு, விசாரணை, தீர்ப்பு.

இதன் மீது முறையீடு.  முறையீட்டின் மீது மேல் முறையீடு.

மூன்று அடுக்கு நீதி முறை.

இது – இந்திய நீதியத்தின் ஆகச் சிறந்த அம்சம்.

இந்தியாவில் உள்ள அத்தனை சட்ட வழிமுறைகளுக்கும் இது பொருந்தும்.

வருமான வரிச் சட்டத்துக்கும்தான்.

ஒருவரின் வருமான வரி ரிடர்ன் மீது மதிப்பீடு செய்து, எவ்வளவு வருமானம், எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்று,

வருமான வரி அதிகாரி (மதிப்பீட்டு அதிகாரி), ஆணை பிறப்பிக்கிறார் என்று கொள்வோம்.

(நினைவில் கொள்க: ரிடர்ன் தாக்கல் செய்யாத நிலையிலும், இத்தகைய ஆணை பிறப்பிக்கப் படலாம்;

இது குறித்துப் பிறகு பார்ப்போம்.)

வருமான வரித் துறை பிறப்பித்த ஆணையில் குறிப்பிட்டு உள்ளபடி, ‘அவ்வளவு வருமானம் இல்லை;

அல்லது, வருமான வரி இவ்வளவுக்கு வராது;

நாம் கோரிய சலுகைகள், விலக்குகளைக் கணக்கில் கொள்ளவில்லை’ என்று தோன்றுகிறது. அப்போது…?

மிக நிச்சயமாக, முறையீடு செய்யலாம்.

வருமான வரி அதிகாரி (Income Tax officer),

உதவி / துணை வருமானவரி ஆணையர் (Assistant / Deputy Commissioner of Income Tax)

ஆகியோரில் ஒருவர்தான், மதிப்பீட்டு ஆணையராக (Assessing Officer) இருந்து, ஆணை பிறப்பித்து இருக்க முடியும்.

இந்த, மதிப்பீட்டு ஆணையின் மீது, முறையீட்டு ஆணையர் (Appellate Commissioner) முன்பாக முறையீடு செய்யலாம்.

இவர், வருமான வரித் துறையில் ஆணையர் பொறுப்பில் உள்ளவர். அதாவது, நம்முடைய முறையீடு, வருமான வரித் துறைக்குள்ளேயே, ஆணையர் பொறுப்பில் உள்ள ஒருவர் முன்பு விசாரணைக்கு வரும்.

முறையீட்டு ஆணையர் என்பது, வருமான வரித் துறைக்கு உட்பட்ட பதவியாக இருந்தாலும், அது ஒரு, ‘பகுதி நீதிய பதவி’ அதாவது, Quasi Judiciary Post. இதற்கு என்ன பொருள்..?

முறையீட்டை விசாரிக்கிற ஆணையர், வருமான வரித் துறைக்கு சாதகமாக செயல் படுவார் என்கிற எண்ணமே வேண்டாம்.

வரித் துறைக்கும், வரி செலுத்துவோருக்கும் இடையே நடு நிலையுடன், ஒரு நீதிபதியாகத்தான் செயல் படுவார். முறையாக விசாரித்து, சட்ட நுணுக்கங்களை முழுமையாக ஆராய்ந்து, முறை யீட்டு ஆணையர், தீர்ப்பு வழங்குவார்.

அது, வரித் துறைக்கு சாதகமாகவோ, அல்லது, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையிலோ அமையலாம். அதே போல, இந்தத் தீர்ப்பு, வரித் துறைக்கோ, வரி செலுத்துவோருக்கோ, பாதகமாக அமையலாம்.

முறையீட்டுத் தீர்ப்பால் மன நிறைவு கொள்ளாத, ‘பாதிக்கப் பட்ட’ தரப்பு, (வரித் துறையாகவும் இருக்கலாம்) மேல் முறையீட்டுக்குச் செல்லலாம்.

இந்த முறை, முறையீட்டு மனு, முறையீட்டுத் தீர்ப்பாயம் (Appellaate Tribunal) முன்பாக தாக்கல் செய்யப் பட வேண்டும். இந்தத் தீர்ப்பாயம், முற்றிலும் நீதியம் சார்ந்த அமைப்பு. (Judicial Body).  தீர்ப்பாயத்தின் உறுப்பினர் (Member), நீதியத்தின் உறுப்பினர் ஆக இருப்பார்.

மேல் முறையீட்டின் மீது தரப்படுகிற தீர்ப்பு, அனேகமாக இறுதியானது. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்பட்டது.

சரி… முறையீடு செய்ய என்ன கால அவகாசம் தரப்பட்டு இருக்கிறது..?

முறையீட்டுக் கட்டணம் எவ்வளவு…?

முதல் முறையீடு – மதிப்பீட்டு ஆணை (assessment order) வழங்கப் பட்டதில் இருந்து

30 நாட்களுக்குள்ளாக முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

கட்டணம் – மதிப்பீட்டு வருமானத்தின் அடிப்படையில், ரூ. 250இல் இருந்து ரூ. 1000 வரை இருக்கலாம்.

மேல் முறையீடு – முறையீட்டு ஆணை (Appellate Order)  வழங்கப்பட்டதில் இருந்து 60 நாட்களுக்குள்ளாக மேல் முறையீட்டு மனு, தாக்கல் செய்யப் பட வேண்டும்.  கட்டணம் – முறையீட்டு வருமானம், அதன் மீதான வரி அடிப்படையில், ரூ. 500 இல் இருந்து ரூ. 10,000 வரை இருக்கலாம்.

முறையீடு, மேல் முறையீட்டு மனுவுடன், என்னென்ன இணைப்புகள் தேவைப்படும், இவற்றை எவ்வாறு தயாரிப்பது போன்ற தகவல்களை, பிறகு விரிவாகப் பார்ப்போம்.

அறிமுகப் படலத்தின் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டோம்.

‘இருங்க… இருங்க… இருங்க….

அது எப்படி நிறைவுக்கு வருவீங்க….?

முக்க்க்கியமான ஒரு விஷயத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை…..!

எங்களைப் பொறுத்த மட்டும், ‘இன்கம்டேக்ஸ்’னாலே ‘அது’தானே ஞாபகத்துக்கு வருது…

அதைப் பத்தி சொல்லாமலே போறீங்க….?

நியாயமா இது’

‘ஓ… ‘அது’வா….? சரி.. சரி..

‘அதை’யும்தான் பார்த்துடுவோமே….’

( தொடரும்.