சேலம்:
ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் 9ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், சேலத்தில், அன்றைய தினம் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி கேட்டு ரஜினி ரசிகர்கள் கடிதம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்களின் அலப்பறை குறித்து சமூக வலைதளங்களில் நக்கல் அடிக்கப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 9ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரவுள்ளது. உலகம் முழுவதும் 8 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்து உள்ளது.
இதற்கிடையில், நேற்று சென்னையில் விளம்பர நிகழ்வு நடைபெற்றது. அதில், தர்பார் விளம்பரம் பொறித்த ஏர்டெல் சிம்கார்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சேலத்தில் தர்பார் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்படும்போது, அங்குள்ள ஏஆர்ஆர்எஸ் திரையரங்கின் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்களை தூவ ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு அனுமதி கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இந்த மனு வருவாய்க் கோட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டு தற்போது வட்டாட்சியரின் மேற்பார்வையில் இருந்து வருகிறது. ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவ அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டாட்சியருக்கு வருவாய் கோட்டாட்சியர் அனுப்பியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆன்மீக அரசியலுக்கு வருவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறிய ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்து, அவ்வப்போது அரசியல் பஞ்ச் டயலாக் பேசி உசுப்பேத்தி வருகிறார். தனது 70வயதிலும் கோடி கோடியாக சம்பாதித்து சொத்து சேர்த்து வருகிறார்…. ஆனால், அவரது ரசிகர்களான அன்றாடங்காய்ச்சி கள்… அவரது படம் வெளியாகும்போது லட்சக்கணக்கில் செலவு செய்து ஹெலிகாப்டரில் மலர் தூவ ஏற்பாடு செய்கிறார்களாம்….