தேகன்பூர்:

மத்திய பிரதேச மாநிலம் தேகன்பூரில் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், அஸ்ஸாமில் நடந்த சண்டையில் பார்வையிழந்த உதவி கமாண்டன்ட் சந்தீப் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி இந்திரக்ஷி குறித்த தகவல்களை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2000ம் ஆண்டு நடந்த சண்டையில் இவரது பார்வை பறிபோனது. இதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இந்திரக்ஷி இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 9 வயதில் பெண் குழுந்தை உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் மிஸ்ரா வீட்டிற்கு ராஜ்நாத் சிங் சென்றார்.

மிஸ்ராவின் தியாகத்தை பாராட்டிய அமைச்சர், தம்பதியர் அழைப்பை ஏற்று அவர்களது வீட்டில் நடந்த மதிய உணவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,‘‘2000ம் ஆண்டில் சந்தீப் மிஸ்ரா அஸ்ஸாமில் நடந்த சண்டையின் போது தனது பார்வையை பறிகொடுத்துள்ளார். நாட்டின் மீதான அவரது நேசிப்பை இதன் மூலம் அறிய முடிகிறது.

அவர்களோடு மதிய உணவு சாப்பிட்டது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட அதிகாரியை அவரது மனைவி இந்திரக்ஷி திருமணம் செய்து கொள்ள சம்மதித்தது மிஸ்ராவுக்கு மேலும் வலிமையை ஏற்படுத்தியிருக்கும்’’ என்றார்.