டில்லி

மேற்கு வங்க கவர்னர் திரிபாதியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அமச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்

கடந்த வாரம் வெள்ளியன்று மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முகநூலில் முகமது நபி பற்றி ஒரு ஆட்சேபகரமான பதிவு ஒன்றை பதிந்திருந்தார்.  அவரை காவல்துறை கைது செய்ததையொட்டி பெரும் கலவரம் ஏற்பட்டது.  இது மாநிலத்தில் மதக் கலவரமாக உருவெடுத்தது.  இதையொட்டி ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

கவர்னரிடம் இது குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.  அவர் முதல்வர் மம்தாவிடம் தொலைபேசியில் உரையாடியதாக தெரிகிறது.  மம்தா அதன் பின் ஆவேசத்துடன், தன்னை கவர்னர் பாஜகவின் வட்டத்தலைவர் போல நடத்துகிறார் என்றும் தான் விரைவில் ராஜினாமா செய்யப்போவதாகவும் நிருபர்களிடம் கூறினார்.  மேலும், தன்னை முதல்வர் ஆக்கியது மக்கள் தான் எனவும், கவர்னர் அல்ல எனவும் கூறினார்.   இதுபோல அவமானத்தை தான் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்தார்.

இதை கவர்னர் மறுத்ததுடன்,  தொலைபேசியில் தாம் என்ன பேசினோம் என்பது வெளியில் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரையும் தங்களின் சண்டைகளை நிறுத்திவிட்டு மாநிலத்தில் அமைதியை கொணரும் பணியை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.