சென்னை: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் (நளினியின் தாயார்) மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி ஆகியோருக்கு ஏற்கனவே தமிழகஅரசு பரோல் வழங்கியுள்ள நிலையில், தனக்கும் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மற்றொரு கைதியான முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 7 பேர் சென்னையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 32ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் நிலையில், தங்களை விடுவிக்க கோரி மத்திய, மாநில அரசுகளிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால், அதை அரசுகள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கைதிகளில், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் பரோல் பெற்று வெளியே சென்றுள்ளனர். இதையடுத்து, மற்றொரு கைதியான முருகனும் பரோல் கோரி தமிழகஅரசிடம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முருகனின் மாமியார் (நளினின் தாயார்) பரோல் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். மனுவில், தனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால் மருமகன் முருகனுக்கும் 30 பரோல் வழங்க வேண்டும். முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏதுவாக பரோல் வழங்க வேண்டும் என நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றுள்ள தால் இந்த மனுவை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.