சென்னை: பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவு எடுக்காமல் சிறைத் துறைக்கு அனுப்பியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கொரோனா காரணமாக, பேரறிவாளனுக்கு தொற்று ஏற்படும் அபாயம் என்பதால் பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் மனு தாக்கல் செய்தார். பரோல் பற்றி முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

ஆனால் மனு மீது முடிவெடுக்காமல் சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது பரோல் மனு தொடர்பாக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 31 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் விசாரணையின் போது சிறைத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பேரறிவாளன் ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது வெளியே அனுப்பினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.