சென்னை,

டிகர்  ரஜினி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சி தொடங்கி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ரஜினியில் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் முதல்வராக ஆகக்கூடாது என்று கடுமையாக எதிர்த்து வந்த சீமான் தற்போது, ரஜினியின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ் நாட்டில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றுள்ளது. என் தேசம் என சொல்பவர்கள் காவிரி மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனையின் போது எங்கு போனார்கள். இந்த பிரச்சனை எழும்போது சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாகிறார்கள்.

பேருத்துகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் தாக்கப்பட்டனர். அப்போது ஒரே நாடு ஒரே தேசத்தில் ஏன் மக்களை அடித்து விரட்டுகிறார்கள் என்று யாரும் கேட்கவில்லையே ஏன். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்.

ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது மக்களிடம் கொண்டு செல்ல, அவர் என்ன சொல்கிறார் சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் என்றால் அமைப்பு, அதைத் தான் நாங்களும் அமைப்பு சரியில்லை, எந்தெந்த அமைப்பு சரியில்லை என்று சொல்லி வருகிறோம். அதே போல ரஜினியும் அவர் எந்த சிஸ்டம் சரியில்லை என்று தெளிவாக சொல்ல வேண்டும்.

8 கோடி தமிழனில் எவனுக்குமே தகுதியில்லை, யாருமே யோக்கியன் இல்லை என்பதைத் தான் சொல்ல வருகிறார்களா இவர்கள். அறத்தின் வழியில் ஆட்சி செய்த மறவர் கூட்டம் தமிழர் கூட்டம், எங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரத் தேவையில்லை. நீங்கள் ஒதுங்கி இருந்தாலே போதும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். சிஸ்டம் சரியில்லை என கூறுபவர் என்ன என்பதை விளக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறினார்.