ஹாஜி மஸ்தான் – சுந்தர் சேகர் – ரஜினி

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த்  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.  பிரபல கடத்தல்காரராகவும், தாதாவாகவும் மும்பையில் சில வருடங்களுக்கு முன்புவரை வாழ்ந்து மறைந்த ஹாஜி மஸ்தான் வாழ்க்கையைத்தான் படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தாதா வேடத்தில் ரஜினி நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.

 

இந்த நிலையில் ஹாஜி மஸ்தான் . வளர்ப்பு மகனான சுந்தர் சேகர் மிஸ்ரா என்பவர் ரஜினிகாந்த்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

 

“ஹாஜி மஸ்தான் கடத்தல்காரோ  தாதாவோ கிடையாது. அவர் மீது எந்தவொரு வழக்கும் இல்லை. அவர் ஒரு பிரபல தொழிலதிபர் மட்டுமே.   அவரைப்பற்றி அந்த படத்தில் தவறாக சித்தரிக்க வேண்டாம்.  மீறி ஹாஜி மஸ்தானை தவறாக சித்தரித்தால், கடும் எதிர்விளைவினை சந்திக்க நேரிடும்” என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கதையை மாற்ற ரஜினியும், ரஞ்சித்தும் ஆலோசித்தனர். இந்த நிலையில்  இப்படத்தை தயாரிக்கும் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷின் தயாரிப்பு நிறுவனமான “வுண்டர்பார் பிலிம் பாக்டரி” நிறுவனத்திலிருந்து ஒரு  அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரவித்துள்ளதாவது:

நாங்கள் தயாரித்து வரும் இப்படம் (Production NO: 12) மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே. இப்படத்தின் கதை யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது. குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் திரு.ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது திடீரென படத்தின் கதை அம்சத்தை மாற்றுவதால் படப்பிடிப்புக்குச் செல்வது தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.