ஜினி – இந்த மூன்றெழுத்து பெயரே வேத மந்திரம் என்று வாழ்ந்தவர் பலர். இப்போதும் அப்படிப்பட்ட ரசிகர்கள் உண்டு.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தஞ்சையைச் சேர்ந்த ரஜினி கணேசன்.
ரஜினிக்கு முதன் முதன் முதலாக தமிழகத்தில் ரசிகர் மன்றம் துவக்கியவர்களில்  இவரும் ஒருவர். “ரஜினி”   என்ற பெயரை,   தனது பெயரோடு..   தன்னோடு…    பிரிக்க முடியாத பந்தமாய்  ஏற்றுக்கொண்டவர்களில் இவரும்   ஒருவர்.
ரஜினி ரசிகர் மன்றத்தின் தஞ்சை மாவட்ட தலைவராக கம்பீரமாக வலம் வந்தவர். தனது “தலைவரின்” படங்கள் வெளியாகும் போதெல்லாம், பெரும் பாட்டாளத்துடன் அதை திருவிழாவாகவே கொண்டாடுவார்.  ரஜினியுடன் சேர்ந்து இவரும், இவரது தோழர்களும் போஸ்டர்களில் ஊரெங்கும்    மின்னுவார்கள். படம் வெளியாகும் தியேட்டர்களில்   முப்பது அடியில் ரஜினிக்கும் மூன்றடியில் இவருக்குமாக கட் அவுட்  மனிதர்களை மிரட்டும். தியேட்டர் வாசலில் காகிகதப்பூ அலங்காரம் கண்ணைக் கவரும்.
ரஜினி படம் வெளியாகும் அன்றும் மறுநாளும் ரசிகர் மன்ற சிறப்புக்காட்சிகளை நடத்துவார், ரஜினி கணேசன்.  படம் வெற்றி பெற வேண்டும் என்று இவரும் இவரது தோழர்களும் விரதமிருப்பார்கள்,  நேர்த்திகடன் வேண்டிக்கொள்வார்கள்.
1990களின் துவக்கத்தில் ரஜினி படத்தில் வரும் வசனங்கள், அரசியலாக பார்க்கப்பட்ட காலம்.   1996ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுத்தார்.
அதற்கு முன்பே “தலைவர்” அரசியலுக்கு வர வேண்டும் கோரிக்கை வைத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மீது அரசியல் ஒட்டப்பட்டது.  ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள்,  ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக பார்க்கப்பட்டார்கள்.
அப்படி தஞ்சை மாவட்ட “செயலாளராக” பார்க்கப்பட்டவர் ரஜினி கணேசன். ரஜினி கணேசனையும் வருங்கால எம்.எல்.ஏ, அமைச்சர் என்றுதான் ஊர் பார்த்தது.
இந்த நிலையில்,    அந்த சம்பவம் நடந்தது.  அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வந்த ரஜினி கணேசன் வேலை இழக்க நேரிட்டது.
இதற்கிடையே.. தனக்கான ரசிகர் வட்டாரத்தில் இருந்ததாக நம்பப்பட்ட ரஜினி, அனைத்து தரப்பினருக்குமான் எண்டர்டெய்னராக உருமாறினார்.  ரசிகர்கள் அவரை சந்திப்பது அரிதானது. தமிழகம் முழுதுமிருந்து ரஜினியை காண வரும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டம் வந்து ரஜினி மன்ற தலைமை நிர்வாகிகளை மட்டும் “தரிசித்து” ஊர் திரும்பினர்.
மெல்ல மெல்ல…. ரசிகர் மன்றத்திலிருந்து ரஜினி விலக.. ரஜினியிடமிருந்து ரசிகர்களும் விலக ஆரம்பித்தனர். ஆனால் இன்னமும், ரஜினி என்ற மூன்றெழுத்தை  தமது  முன்ஜென்ம தொடர்பாக நினைத்து வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் 53 வயதான ரஜினி கணேசன்.  ரஜினியின் தஞ்சை மாவட்ட முகமாக அறியப்பட்ட இவர், முன்புபோல ஆக்டிவா இல்லை. ஆனாலும் தொடர்ந்து இயங்கிவருகிறார்.
நாளை மறுநாள் வர இருக்கும் கபாலி படத்துக்கு இவரது “பணிகள்”  என்ன என்பது குறித்து அறிய அவரை தொடர்புகொண்டு பேசினேன்.

"ரஜினி" கணோசன்
“ரஜினி” கணோசன்

“வணக்கம்…   ரெண்டுமூணு முறை போன் செஞ்சேன்.. இங்கே இருக்கேன் அங்கே இருக்கேன்னு சொன்னீங்க.. இப்ப பேச டைம் இருக்கா..?”
“சொல்லுங்க சொல்லுங்க..”
“ தஞ்சாவூரை பொறுத்தவரை ரஜினி அப்படின்னாலே  உங்க ஞாபகம்தான் வரும்… ரஜினி படம் வந்தாலே நீங்கதான் நிறைய போஸ்டர், பேனர்னு கலக்குவீங்க..   ஊர் முழுக்க ரஜினி மன்றங்களை திறந்துவச்சு, ரஜினி பத்தி ரொம்ப்ப பெருமையா பேசுவீங்க… அப்புறம் அப்படியே ஒதுங்கிட்டீங்க..!”
“ம்.. ஆமாமாம்..  ஆனா முழுசா ஒதுங்கலை…”
“ஓ… இப்போ கபாலிக்கு பண்றீங்களா..?”
“ம்.. முன்னமாதிரி மன்றம்னு ஏதும் இல்லையே.. ஆளுங்களும் இல்லே… நாமதான் பண்ணிக்கிட்டிருக்கோம்!  இப்போ, பிளக்ஸ் பேனருக்கு மட்டுமே ஒரு லட்ச ரூபா வரை ஆயிடுச்சு..! 12 பிட் போஸ்டர்.. ஃபோர் பிட் போஸ்டர் போட்டிருக்கோம்! அடுத்து (கட் அவுட் வைக்க) சாரம் போடணும்..!”
“இத்தனை வருசமா செலவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க..”
“ம்.. இதோட ஒதுங்கலாம்னு இருக்கேன்! போன தடவ லிங்காவுக்கு செலவு பண்ணி கிட்டதட்ட ஒன்னேகால் லட்ச ரூபாய் லாஸ். டிக்கெட்டு போகலை. ரெண்டு சோதான் போட்டோம். கூட்டமே இல்லே..!   பொறுப்பை யார் கிட்டயாவது கொடுத்துட்டு உறுப்பினரா மட்டும் இருக்கலாம்னு பார்க்கிறேன். செலவு பண்ணி முடியல.”
“ம்…. வீட்ல வருத்தப்படுவாங்கல்ல..?”
“க்கும்…. இப்பவும். வீட்டுல (மனைவி) கத்திக்கிட்டு இருக்கு.. புள்ளைங்க கத்துதுங்க….”
”முன்னாடி இளைஞர் நீங்க..   இப்போ உங்க பிள்ளைங்க இளைஞர்களாயிருப்பாங்க.. இப்பவும் நீங்க பேனர், பிளக்ஸூனு அலைஞ்சா திட்டத்தானே செய்வாங்க..”
“ஆமாமாம்..”
“உங்க பையன் என்ன பண்றார்..?”
“பி.ஈ. படிக்கிறான்..”
“அவரு யாரோட ரசிகர்.?.”
“தனுஷ்”
“தனுஷூக்கு மன்றம் ஏதும்..?”
“அய்யய்யோ… அதெல்லாம் விடமாட்டேன். விடமாட்டேன்.  விடவே மாட்டேன்.  அவனை பொறுத்தவரை படம் பார்ப்பான்.. அவ்வளவுதான்..”
“ஓ.. சந்தோஷம்.  1996 வருச தேர்தலுக்கு பிறகு, அடுத்த தேர்தல்ல ரஜினி முதல்வர் ஆயிடுவார்…     நீங்க எம்.எல்.ஏ., அமைச்சர் ஆயிடுவீங்கனு எல்லாம் ஒரு பேச்சு  ஊர் முழுக்க  இருந்தது…”
“ம்க்கும்..!  கடைசியா வேலை போனதுதான் மிச்சம். அரசு போக்குவரத்துக் கழகத்துல வேலை பார்த்தேன்ல. அப்போ நடந்த தி.மு.க. ஆட்சியில என்னை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில அதையே கண்ட்டினியூ பண்ணிட்டாங்க..”
“சரி.. லிங்கா பட ரிலீஸ் அப்போ, உங்களுக்கு லட்சத்துக்கு மேல லாஸ்னு சொன்னீங்களே…விநியோகஸ்தர்கள்  எல்லாம் ரஜினிகிட்ட கோடி கணக்குல திருப்பி வாங்கினதா நியூஸ் வந்துச்சே. நீங்களும் ரஜினிகிட்ட கேட்டிருக்கலாமே..”
“ எப்படி கேக்குறது..”
ரஜினியுடன், "ரஜினி "கணோசன்
ரஜினியுடன், “ரஜினி “கணோசன்

“ஏன் கேட்கட்கூடாது..?”
“நாம, காசு பணத்துக்காகவா பழகுறோம்.. ரஜினிக்காகத்தானே செய்யறோம்..!”
“ அது சரி. அ ப்படி என்னதான் உங்களுக்கு ரஜினி மேல ஈடுபாடு.. ?”
“வந்துருச்சு அவ்வளவுதான்..!  ஆரம்பத்திலேயே வாலை புடிச்சுட்டோம்… !”
“பொதுவா நடிகர்கள் மேல அபிமானம் வைக்கிறது.. செலவு செய்யறது பத்தி எல்லாம் என்ன நெனக்கிறீங்க..?”
“ரசிகர்களோட இளிச்சவாய்த்தனமான செயல் அது..”
“சில நடிகர்கள், ரசிகர்களுக்கு உதவி செய்யறதா கேள்விப்பட்டிருக்கேன்…..”
“விக்ரம், விஜய் மாதிரி சிலர் ரசிகர்களுக்கு உதவி செய்யறது உண்டு.   இவரும் (ரஜினி) ஆரம்பத்துல பண்ணாரு.. அதாவது டெவலப் ஆகிற வரைக்கும். 1989க்கு பிறகு  விட்டுட்டாரு..”
“கன்னியாகுமரி மாவட்டத்த சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருத்தரு, ரஜினியால எல்லாத்தையும்  இழந்தேன்னு ஒரு வார இதழ்ல சொல்லியிருந்தாரே..”
“அவரை பத்தி பேச விரும்பலை.. ஆனா அவரு சொன்னது உண்மைதான்!”
“இன்னொரு விசயம். தன்னோட பொண்ணு கல்யாணத்துக்கு தனியா ரசிகர்களை அழைச்சி விருந்து வைக்கிறவன்னு சொன்ன ரஜினி  இன்னும் வைக்கலை. ரஜினி சொன்னதுக்காக பா.ம.க. நிறுவனருக்கு கறுப்புக்கொடி காட்டின மதுரை மன்றத்தினர் கடுமையா தாக்கப்பட்டாங்க.. அவங்களை போயி பார்க்கறதா சொன்ன ரஜினி பார்க்கலை..”
“ஆமா, உண்மைதான்..”
“அப்படிப்பட்டவர் மேல உங்களுக்கு அப்படி என்ன ஈடுபாடு…?”
“தலைவரு நல்லமனுசந்தான். ஏன் இப்படி மாறுனாருன்னு தெரியலை..  ஆனா, நாம வச்சது பாசம்.. அதை  மாத்திக்க முடியுமா..”
“ரஜினியை எத்தனை முறை பார்த்திருப்பீங்க..”
“1989 வரை அவரு பக்கத்துலதானே இருந்தோம். நூறு நூத்தைம்பது தடவை பார்த்திருப்பேன்.. ”
“சமீபத்துல எப்போ பார்த்தீங்க..?”
“உடல் நலம் முடியாம இருந்தாரே அப்ப போயி பார்த்தேன்.. ரெண்டு வருசம் முன்னால..”
“சரி, இந்தமுறை  கபாலிக்கு டிக்கெட் நல்லா போயிடுமா..”
போயிடும், போயிடும்..”
“ ரசிகர் மன்ற டிக்கெட்  எவ்வளவு விலை போட்டிருக்கீங்க?”
“சும்மா 200 ரூபா போடுவோம்.. அவ்வளவுதான்..”
ஆயிரம் ரெண்டாயிரம்னு எல்லாம் சொல்றாங்களே..”
“இப்பவும்  தலைவருக்கு (ரஜினிக்கு) சிலபேர்  சொந்த காசுல   பிளக்ஸ் பேனர் வைக்கிறான். செலவு பண்றான்.  அவன்கிட்ட அதிகமா வாங்கக்கூடாதுல்ல.. தலைவர்தான் நெனெக்கலை.. நாமளாவது நினைக்கணும்ல..”
பேட்டி: டி.வி.எஸ். சோமு