சென்னை,

டுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்கு வருவதாக ரஜினி இன்று அறிவித்தார். அவருக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் டுவிட்டரில் வாழ்த்து கூறி உள்ளார்.

தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபரின் மகன் ரஜினிக்கு வாழ்த்து கூறியிருப்பது தமிழக மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 6 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினி, இன்று பேசும்போது, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் கூறினார்.

அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினி அறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு திரை உலகினர் உள்பட பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வாழ்த்தி வரவேற்றுள்ளார்.

 

அவர் தனது டுவிட்டர் பதிவில்,  எனது தந்தை ராஜபக்சேவின் பிரியத்துக்குரிய நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு செல்கிறார். உயர்வான செய்தி. இந்த விவகாரத்தில் சினிமாவைப் போல் நிஜவாழ்க்கை ஆகிவிட கூடாது என நம்புகிறேன். (சிவாஜி படத்தில் வருவதுபோல்) நல்லது செய்வதற்காக அவர் சிறைக்கு போவதை பார்க்க விரும்பவில்லை. அரசியலுக்கு வருக என வரவேற்கிறேன்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவின் மகன், ரஜினிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருப்பது தமிழக மக்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.