சென்னை: திமுக பொதுச் செயலாளராக தேர்வாகி உள்ள துரைமுருகன், பொருளாளராக தேர்வான டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 9ம் தேதி நடக்கிறது. முன்னதாக, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதியின் தலைமையில் நடைபெற்ற தேர்தலில், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆகையால், இருவரும் போட்டியின்றி தேர்வாகினர்.
பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.