நடிகர் ரஜினிகாந்த் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் செல்ல ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ என பொய் கூறி இ.பாஸ் பெற்றுள்ளார். வாக்கிங் செல்வதற்காக தனது பண்ணை வீட்டுக்கு செல்லும் ரஜினிகாந்த், மருத்துவ அவசரம் என்று பொய் சொல்லி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி இ.பாஸ் இல்லாமல் கேளம்பாக்கம் சென்று வந்தது சர்ச்சையான நிலையில், இன்று கேளம்பாக்கம் செல்ல அவர் இ.பாஸ் வாங்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அடுத்த மாவட்டங்களுக்கு செல்ல கண்டிப்பான தடை உள்ள நிலையில், அவசர தேவைக்காக பக்கத்துக்கு மாவட்டத்துக்கு செல்ல விரும்பினால், அவர்கள் இ.பாஸ் பெற்றுதான் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இ.பாஸ் பொறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள தமிழகஅரசு, மருத்துவ அவசர உதவி, உயிரிழப்பு, ரத்த சொந்த திருமணம் போன்ற ஒருசில நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற வர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மருத்துவ சிகிச்சை என்று கேட்பவர்களுக்கு கூட அனுமதி வழங்க மறுத்து வருகிறது.
இதனால் சாமானிய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் அரசு கொள்வதில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு (21ந்தேதி) ரஜினிகாந்த் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சொகுசு கொரோனா லம்போகினி காரை அவரே ஓட்டி செல்வதுபோன்ற படம் நெட்டில் வெளியாகி வைரலாகி உள்ளது. அவர் தனது பண்ணை வீடு அமைந்துள்ள கேளம்பாக்கம் சென்று வருவதாக கூறப்பட்டது.
அதுபோல,அடுத்த நாள் ரஜினி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில், ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ வெளியாகி வைராலாகி இருக்கிறது. சென்னையடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் உள்ள தோப்பில் ரஜினி வாக்கிங் செல்லும் படம் வெளியானது.
இந்த நிகழ்வுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் செல்ல ரஜினி இபாஸ் வாங்கினாரா என்ற கேள்வி எழுந்தன.
இந்த நிலையில், நேற்று (22ந்தேதி) இ.பாஸ் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் செய்தியாளர் களிடம் சில தகவல்களை பகிர்ந்தார். அப்போது, உரிய ஆவணங்களுடன் முறையாக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைக்கும். இதுவரை 5 லட்சம் பேர் வரை விண்ணப்பித்ததில் 1.30 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்துள்ளது. முறையான ஆவணம் இருந்தால் உங்களுக்குத் தாராளமாக இ-பாஸ் கிடைக்கும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், ரஜினிகாந்த் இ.பாஸ் பெற்றுதான் கேளம்பாக்கம் சென்றாரா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்தவர், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றுத்தான் செல்ல முடியும். நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் பயன்படுத்தினாரா? என்பது போன்ற குறிப்பான கேள்விகளுக்குத் தகவலை விசாரித்துதான் சொல்லமுடியும்.
1 லட்சத்து 30 பேர் இ-பாஸ் பெற்ற நிலையில் டேட்டாபேஸ் ஆய்வு செய்துதான் சொல்லமுடியும். இ-பாஸ் வாங்காமல் போயிருந்தால் அந்த மாவட்ட அளவில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். என்ன இருந்தது என்பது குறித்து நான் விசாரித்துச் சொல்கிறேன் என்று மழுப்பலாக தெரிவித்தார்.
(ஒவ்வொரு நாளும் இத்தனை பேருக்கு இ.பாஸ் வழங்கப்படுகிறது என்பதை அன்றைய தேதியை குறிப்பிட்டு, இணையதளத்தில் சர்ச் செய்தாலே தெரிந்துகொள்ள முடியும் ஆனால், -ஐஏஎஸ் அதிகாரியான ஆணையாளரோ 1லட்சத்தக்கு 20 பேர் டேட்டாவை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறார்)
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ரஜினிகாந்த் இன்று (23ந்தேதி) கேளம்பாக்கம் செல்வதற்கான இபாஸ் விண்ணப்பித்து சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளார். தற்போது, ரஜினியின் இபாஸ் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், ரஜினியின் தற்போதைய இ.பாஸ்சும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இ.பாஸ் பெற சரியான ஆவணங்கள் தேவை என்றும் தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும் வலியுறுத்தி வரும் நிலையில், இன்று ரஜினிக்கு எதற்காக இ.பாஸ் வழங்கியது என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
தன்னை பண்ணை வீட்டுக்கு சென்று ஒய்யாரமாக ஒய்வெடுக்கவும், வாக்கிங் போகவும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள லம்போகினி காரை தானே ஓட்டிச்செல்லும், ரஜினிகாந்த், மெடிக்கல் எமர்ஜென்சி என பொய்யுரைத்து, சென்னை மாநகராட்சியிடம் இ.பாஸ் பெற்றுள்ளார்.
உண்மையிலேயே அவசர மருத்துவ உதவி கோரி விண்ணப்பித்த பல ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்ப ட்டு, பலர் உயிரிழந்துள்ள நிலையில், ரஜினியின் மெடிக்கல் எமர்ஜென்சி என்ற பொய்யான விண்ணப்பம் உடனே ஏற்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
சரி இன்று அவர் வாக்கிங் செல்ல மருத்துவ அவசரம் என்ற பெயரில், பொய்யுரைத்து இபாஸ் பெற்றுள்ளார்.
ஆனால், ஏற்கனவே பல நாட்கள் அவர் இ.பாஸ் பெறாமல் அவர் கேளம்பாக்கம் சென்றுள்ளாரே? அதற்கு என்ன தண்டனை…
அடுத்த மாவட்டத்தைச் சேர்ந்த கேளம்பாக்கத்திற்கு இ.பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி வழங்கியது யார்?
அவரை ஏன் காவல்துறையினர் மடக்கவில்லை?
சாமானிய மக்கள் வெளியே சென்றால் வாகங்களை பறிமுதல் செய்யும் காவல்துறையினர் ரஜினியின் லம்போகினி காரை ஏன் பறிமுதல் செய்யவில்லை, அவர்மீது ஏன் வழக்கு தொடரவில்லை?
ஏற்கனவே இ.பாஸ் இல்லாமல் சென்றதற்கு அவர்மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினி, அரசின் உத்தரவை மீறி நடந்துகொண்டது சரியா?
மக்களுக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா?
என்று சரமாரியாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்? ரஜினி காந்தா?, தமிழகஅரசா? சென்னை மாநகராட்சியா?
சிஸ்டம் சரியில்லை என்று தமிழகஅரசை விமர்சித்த ரஜினிகாந்த், தனது தேவைக்காக அரசை ஏமாற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம்… இப்போது சிஸ்டம் சரியாயிருகா ரஜினி சார்…
ஆன்மிக அரசியலை கையில் எடுக்கப்போவதாக கூறி கடந்த 3 வருடமாக தமிழக மக்களை ஏமாற்றி வரும் ரஜினிகாந்த் எப்போதும் போல, இ.பாஸ் விஷயத்திலும் மெடிக்கல் எமர்ஜென்சி என ஏமாற்றி அனுமதி பெற்றுள்ளது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.