துக்ளக் வார இதழின் ஆண்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதி்ல் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். இதையடுத்து தான் அரசியலுக்கு வர அச்சாரமாகவே இந்த வார்த்தைகளை ரஜினி பேசியிருக்கிறார் என்று அரசியல்வட்டாரத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.
அதே நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் இதழின் தற்போதைய ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசினார்.
துக்ளக் இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த சோ ராமசாமி, மறைந்ததை அடுத்து, குருமூர்த்தி ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார். இவரது கருத்துக்களும் சோவைப்போலவே இருப்பதால், இவரை “அடுத்த சோ” என்றே பலரும் அழைக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் குருமூர்த்தி பேசியதாவது:
“அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என அவரிடமே சோ பலமுறை தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு நீங்கள் வேண்டும்.இதுதான் துக்ளக் இதழ் மற்றும் என்னுடைய நிலைப்பாடு. இந்த முடிவை ரஜினிகாந்த் தனிப்பட்ட முறையில் எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்,அரசியலுக்கு வர வேண்டும்
ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்று தெரியும்.ஆனால் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்..” என ஆடிட்டர் குரு மூர்த்தி பேசினார்.