“மலேஷியா வாசுதேவன்’’ -ரஜினி சொல்லும் ரகசியம்
தனது 30 ஆண்டுக்கால சினிமா பயணத்தில் 8 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார், மலேஷியா வாசுதேவன்.
சுமார் 80 திரைப்படங்களில், அநேகமாக அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்துள்ளார்.
மலேஷியா வாசுதேவனின் 75 –வது பிறந்த நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
‘’ எனக்காக மலேஷியா வாசுதேவன் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள்.
‘’பொதுவாக என் மனசு தங்கம்’’ ‘’ ஒரு தங்க ரதத்தில் ‘’ ‘’ போக்கிரிக்கு போக்கிரி ராஜா’’ ஆகிய பாடல்களை ‘ஸ்பெஷல்’ என்று சொல்லலாம்.
தனது கடைசி நாட்களில்( எனக்கு அப்போது அது தெரியாது) மலேஷியா வாசுதேவன் என்னைப் பார்க்க விரும்பினார்.
எனது இல்லத்தில் நான் அவரை சந்தித்தேன். ‘’உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’’ என கேட்டேன். ’’உங்களை பார்க்க விரும்பினேன். வந்தேன். அவ்வளவு தான்’’ என்றார்.
நான் மீண்டும் அவரிடம்’’ நான் ஏதாவது செய்ய வேண்டுமா? சொல்லுங்கள்’’ என்று அழுத்தமாக கேட்டபோது ‘’ நான் என் வாழ் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். எனது நெருங்கிய நண்பர்களைப் பார்க்க ஆசைப்பட்டேன். அவர்களில் நீங்களும் ஒருவர்’’ என்று கூறியபோது, நான் உடைந்து போனேன். கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை..
பின்னர் என்னிடம் விடை பெற்று சென்று விட்டார். சில நாட்களில் இறந்து விட்டார். ஒரு சிலர் மட்டுமே, மரணத்தை முன் கூட்டியே உணர முடியும். அவர்களில் மலேஷியா வாசுதேவனும் ஒருவர்’’ என்கிறார், ரஜினிகாந்த்.
-பா.பாரதி.