கிட்டதட்ட இருபத்தியிரண்டு வருடங்களாக நீடித்துக்கொண்டிருந்த, “ரஜினி அரசியலுக்கு வருவாரா” என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. தனிக்கட்சி துவங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் ரஜினி.
தமிழத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவு, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அரசியல் செயல்பாடு இன்றி இருப்பது ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசியலுக்கு புது வரவாக கமல், ரஜினி ஆகியோர் வந்துள்ளனர்.
தனிக்கட்சி துவங்கி 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக ரஜினி இன்று அறிவித்துள்ளார்.
“ஆட்சி அமைக்கும் அத்தனை கட்சிகளும் மக்களை கொள்ளையடிக்கின்றன. சிஸ்டம் சரியில்லை. கிளீன் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர் அரசியலில் கடந்து வந்த பாதைகளைப் பார்ப்போம்.
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு புதியவர் அல்ல. கடந்த 1995ஆம் ஆண்டில் தனது முத்து படத்தில் நான் எதற்கு அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். நேரம் தான் இதை தீர்மானிக்கும் என்று வசனம் மற்றும் பாடல்கள் மூலம் தெரிவித்து இருந்தார்.
பிறகு பாட்சா பட விழாவின் போது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, “இதே நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது” என்று வாய்ஸ் கொடுத்தார்.
அந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தோல்வி அடைவதற்கு இவரது வாய்ஸும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது.
, கடந்த 2002ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள அனைத்து உள்ள ஆறுகளையும் இணைக்க ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
இடையில் இரு முறை நாடாளுமன்றத் தேர்தலில் இவர் கொடுத்த வாய்ஸ் எடுபடவில்லை. குறிப்பாக “பாமக தலைவர் ராமதாஸ் ராட்சசன். அக் கட்சி போட்டியிடும் தொகுதியில் அக் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க மன்றத்தினர் பாடுபட வேண்டும்” என்றார். ஆனால் அத்தொகுதிகளில் எல்லாம பாமக பெரும் வெற்றி பெற்றது.
2008ல் அரசியல் வெற்றிக்கு காரணம் திறமை, அனுபவம், கடும் உழைப்பு என்று சொல்வது முட்டாள்தனம். இது அனைத்தும் நேரம், சமய சந்தர்ப்பத்தை சார்ந்தது. நேரம் சரியில்லை என்றால், எதுவும் உதவி செய்யாது என்று தெரிவித்தார். .
பிறகு நீண்ட மவுனம் காத்த அவர், 2014ல் நான் அரசியலுக்கு வர வேண்டுமா? வரவேண்டாமா? என்பதை கடவுள்தான் முடிவு செய்வார் என்றார்.
கடந்த 2014ல் பாராளுமன்றத் தேர்தலின் போது சென்னை வந்த பிரதமர் (வேட்பாளர்) மோடி, ரஜினிகாந்தின் போயஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நான் அதிகாரத்தை விரும்புகிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார் ரஜினி.
உடனடியாக இதை வாபஸ் பெற்று, ஆன்மீக அதிகாரத்தை கூறினேன். வேறு அதிகாரங்கள் எதையும் கூறவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் இன்று, “தமிழகத்தின் நிலையைப் பார்த்து பிற மாநில மக்கள் சிரிக்கிறார்கள். இந்த நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகம் மன்னிக்காது” என்று கூறியிருக்கிறார்.
பார்ப்போம்.. மாற்றத்தை ஏற்படுத்துகிறாரா என்று!