சென்னை :

ஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்பு, தமிழக பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக இருந்து வந்தார்.

அர்ஜுன மூர்த்தி குறித்த சில தகவல்கள் :

நேற்று மதியம் ரஜினி கட்சியின் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட அவர், அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான், பா.ஜ.க.வில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அர்ஜுன மூர்த்தி, ‘சன்’ குழும தலைவர் கலாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறனிடம் இதற்கு முன்பு பணியாற்றியுள்ளார். சுமார் ஏழு ஆண்டுகள் முரசொலி மாறனிடம் இருந்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளராக இவரது வேலை தான் என்ன?

அவரே சொல்கிறார்:

“கட்சியை தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. மற்ற பெரிய கட்சிகளுக்கு இணையாக எங்கள் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். குறுகிய கால அவகாசம் இருப்பதால், தொழில் நுட்பம் மூலம் மட்டுமே இது சாத்தியப்படும்.

பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் குறுகிய காலத்தில் கட்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

கட்சியை பூத் வாரியாக கட்டமைக்கும் வகையிலான, தரவுகள் ஏற்கனவே எங்களிடம் உள்ளது” என்றவரிடம் “ரஜினி ஏன் இவ்வளவு காலதாமதம் செய்தார்?” எனக்கேட்டபோது “இது கால தாமதம் அல்ல, தலைவருக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.

ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து, அனுமானித்து முடிவு எடுப்பவர் தலைவர். அதன்படி அனுமானித்து இப்போது அறிவித்துள்ளார்” என்கிறார், ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி.

– பா. பாரதி