சென்னை,

டுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்கு வருவதாக ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்சியை அளித்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்,  பாட்சா படத்தயாரிப்பாளரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்.எம். வீரப்பனை அவரது இல்லத்தில் இன்று  சந்தித்து பேசினார்.

கடந்த ஆண்டு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்ட ரஜினிகாந்த், மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தொடர்ந்து  6 நாட்கள்  ரசிகர்களை சந்தித்து வந்தார்.

அதைத்தொர்ந்து கடந்த 31ந்தேதி பேசும்போது, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் கூறினார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சியினர் உள்பட  திரை உலகை சேர்ந்தவர்களும், வாழ்த்தும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது அரசியல் குறித்து புதிய வெப்சைட்டும், மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் ரஜினி, ராமகிருஷ்ணா மடம் சென்று அங்குள்ள சாமியார்களை சந்திதார். அதைத்தொடர்ந்த நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில், பிரபல படத்தயாரிப்பாளரும், ரஜினி புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற ‘பாட்சா’ படத் தயாரிப்பாளரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான  ஆர்.எம். வீரப்பன் வீட்டுக்கு  இன்று திடீரென சென்று  சந்தித்து பேசினார். அப்போது அவருடன் தான் தொடங்கப் போகும் அரசியல் கட்சி குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது.