தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிர் இழந்தனர்.

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் பேட்டி அளித்த அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் பங்கேற்றதால் வன்முறை நிகழ்ந்தது” என தெரிவித்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

இந்த ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்க ரஜினிகாந்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.

ஆனால், ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு ரஜினி கோரி இருந்தார். எனவே அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் 24 –வது அமர்வு அடுத்த மாதம் ( ஜனவரி) நடக்கிறது.

அப்போது, விசாரணை ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

– பா. பாரதி