சென்னை:
ருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கி இருக்கிறது.

வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் தேதி ஆண்டுதோறும் வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்த நிலையில் நேற்று சென்னை டிடிகே சாலையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் நடந்த இந்த விழாவில், தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் அதிக வருமான வரி செலுத்தியவர்கள் வருமான வரித்துறையால் கவுரவிக்கப்பட்டனர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வருமான வரித்துறை செலுத்தியதற்காக விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்தின் சார்பாக அவரது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை, “ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல; Super Tax Payer” என்று புகழாரம் சூட்டினார்.