சென்னை
அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்ததில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவருடைய ரசிகர்கள் சுமார் 30 வருடங்களாகக் காத்திருந்தனர். தற்போது அவர் தாம் கட்சி தொடங்கப் போவதாகவும் அது குறித்த அறிவிப்பு இந்த மாதம் 31 ஆம் தேதி வெளியாகும், எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதையொட்டி அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தன.ர் ஆனால் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் தாம் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது அவருடைய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற மதுரைக் கிளை துணை செயலர் அழகர்சாமி, “தலைவரின் இந்த முடிவு எங்கள் இதயத்தில் இடி போல இறங்கி உள்ளது. நாங்கள் கடந்த 30 வருடங்களாகத் தலைவர் கட்சியைத் தொடங்குவார் என்பதால் எந்த கட்சியிலும் சேராமல் இருந்தோம். அவருடைய உடல்நலம் தான் எங்களுக்கு முக்கியமானது என்றாலும் அவருடைய முடிவை எங்களால் ஏற்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சேர்ந்த பலரும் இந்த முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அதே வேளையில் அவரது உடல்நலம் முக்கியம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அவருடைய முடிவை ஏற்கலாம் எனவும் ஆனால் ஏற்க மனம், வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மற்றொரு தொண்டரான யுவராஜ், “தலைவர் வழியே எங்கள் வழியாகும். அவர் ஆன்மீகத்தை தேர்வு செய்தால் நாங்களும் ஆன்மீக வழியில் நடப்போம். பொதுச்சேவையைத் தேர்வு செய்தால் நாங்களும் மக்களுக்கு சேவை செய்வோம். அவர் அரசியல் பாதையை எங்களுக்குக் காட்டி இருந்தால் நாங்களும் அரசியலில் இறங்கி இருப்போம். அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்களுக்கு ஒரே ஆசையாகும்
தமிழக அரசியலில் மாறுதல் ஏற்படாதது ஒன்றே எங்களுக்கு வருத்தமாக உள்ளது நாங்கள் நல்ல வேட்பாளர்களாகத் தேர்வு செய்து பட்டியலும் தயாராக வைத்திருந்தோம். இனி ரஜினிகாந்த் யாரைச் சொல்கிறாரோ அவருக்குத் தேர்தல் பணிகள் செய்வோம். அவருடைய மன்றம் மூலம் இனி நற்பணிகளைத் தொடர்வோம். இது அவருடைய உடல்நிலை குறித்த விவகாரம் என்பதால் நாங்கள் இதை எதிர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
வடசென்னை ரஜினி மக்கள் மன்ற தொண்டர் ஒருவர், “தலைவர் முடிவை நாங்கள் பின்பற்றுவோம். ஆனால் ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து இயங்கும் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. ரஜினிகாந்த் வழியில் நாங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்வோம். ஆனால் ரஜினிகாந்த் தனது முடிவு குறித்து மாவட்டச் செயலர்கள் யாருக்கும் கூட தெரிவிக்கவில்லை. எங்கள் அனைவருக்குமே அவர் அறிவிப்பை வெளியிட்ட பிறகே அவர் முடிவு தெரிய வந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]