‘’ஜோரா கை தட்டுங்க.. கொரோனா ஓடிரும்’’ வாங்கி கட்டிக்கொண்ட மோகன்லால்..
நேற்று-ரஜினிகாந்த். இன்று- மோகன்லால்.
‘’12 மணி நேரம் வெளியில் நடமாடாமல் இருந்தால் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும்’’ என்று முதலில் கருத்து தெரிவித்து, பின்னர் அதனை விலக்கி கொண்டார், ரஜினிகாந்த்.
ரஜினிகாந்துக்கு குறைந்தவரா என்ன மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்?
அவரும் கொரோனா வைரசை விரட்ட ஒரு ஐடியா கொடுத்தார்.
‘’அனைவரும் ஒன்றாக இணைந்து கை தட்டுங்கள். ஒலி மந்திரம் போன்றது. அது, அனைத்து வித வைரஸ் மற்றும் பாக்டீரியாவை ஒழித்துவிடும்’’ என்று டி.வி.சேனல் ஒன்றுக்கு மோகன்லால் பேட்டி அளித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் அந்த பேட்டி வைரலாக பரவ-
‘’கை தட்டினால் எப்படி வைரஸ் ஒழியும் ?’’ என்று பலரும் மோகன்லாலை வறுத்து எடுத்து விட்டனர்.
‘’ ரஜினிகாந்தை அடுத்து மோகன்லாலும், கர ஒலியால் ஏற்படும் அதிர்வுகள் வைரசை கொன்று விடும் என்று புரளி கிளப்பி விட்டுள்ளார். இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வது?’’ என்று ஒருவர் புலம்பியுள்ளார்.
‘’எங்களுக்கு குழப்பமாக உள்ளது. கை தட்டல் எப்படி பாக்டீரியாவை விரட்டும்?தயவு செய்து விளக்குங்க மோகன்லால்’’ என்று இன்னொருவர் டவிட் செய்ய- மோகன்லால் தொலை தொடர்புக்கு அப்பால் போய் மறைந்து கொண்டார்.
– ஏழுமலை வெங்கடேசன்