சென்னை,

விரைவில் புதிய கட்சியை தொடங்குவார் ரஜினிகாந்த் என்று, காந்திய மக்கள் இயக்கம் தலைவரான தமிழருவி மணியன் கூறினார்.

இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.

அதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவார், வரமாட்டார் சர்ச்சைகள் எழுந்தது. ஆனால், ரஜினி அதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இன்னும் 2 வாரத்தில்  ரஜினி புதிய கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் கூறி உள்ளார்.

சமீபத்தில் ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய தமிழருவி மணியன் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு  தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், தமிழருவி மணியனின் இந்த தகவல் ரஜினி ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழருவி மணியன் கூறியதாவது:-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை,  போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில்  இரண்டு தடவை சந்தித்துப் பேசினேன். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவருடன் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விரிவாக விவாதித்தோம்.

தமிழ்நாட்டு மக்கள் மீது நடிகர் ரஜினிகாந்த் அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்ததையும் திரை உலகில் தமிழக மக்கள் தன்னை ஏற்றுக் கொண்டதையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. அரசியலுக்கு நிச்சயமாக வருவேன் என்று அவர் என்னிடம் உறுதிபட கூறினார்.

‘‘நான் அரசியலுக்கு வர நினைப்பது பணம் சம்பாதிக்க அல்ல. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வர விரும்புகிறேன்’’ என்று ரஜினி என்னிடம் பல முறை கூறி விட்டார்.

காமராஜர், அண்ணா ஆகியோர் தங்களுக்கு என்று எந்த சொத்தும் சேர்க்காமல் நாட்டு மக்களுக்காக உழைத்தார்கள். அரசியலில் காமராஜரும் அண்ணாவும்தான் தனது ரோல் மாடல் என்று ரஜினி கூறினார். எனவே அந்த வழியில் ரஜினி அரசியலில் சேவையாற்றுவார் என்று நம்புகிறேன்.

இன்னும் 2 வாரங்களில் ரஜினி தனது புதிய கட்சியை தொடங்கி விடுவார். அப்போது அவர் உறுதி மொழிகளாக சில அறிவிப்புகளையும் வெளியிடுவார்.

தென்னக  நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது ஆகியவை அவரது உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர்  கூறினார்.

தமிழருவி மணியனின், ரஜினி குறித்த  இந்த தகவல் எப்போதும்போல காணல்நீராகி விடுமா அல்லது நிஜமாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.