ரஜினிகாந்த்

இப்போது “டாக் ஆப் தி சமூகவலைதளம்”  திரைப்பட இயக்குநரும் தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவருமான  மு. களஞ்சியத்தின், “ரஜினி கொல்லப்படுவார்” என்கிற பேட்டிதான். இந்த நிலையில் அவரிடம் பத்திரிகை டாட் காம் இதழுக்காக பேசினோம்.

விஜய், அஜீத் ஆகியோரை கடுமையாக நீங்கள் விமர்சித்ததாகவும்   அதற்கு அவர்களது ரசிகர்கள் உங்களை விமர்சிப்பதும் சமூகவலைதளங்களில் பரபரப்பாக உலா வருகிறது. பரபரப்புக்காக இப்படி பேசினீர்களா?

 நான் பரபரப்புக்காக எப்போதும் பேசுபவன் இல்லை. பெ.மணியரசன் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. அதில், “திரைத்துறையில் அயலார்” என்ற தலைப்பில் நான் பேசினேன்.

அந்த வகையில், தமிழ்த் திரைத்துறையில் தமிழர்கள் அல்லாதவர்கள் யார் யார் என்பது குறித்து பேச வேண்டியிருந்தது. அதிலும்கூட அஜீத்தைப் பற்றி நான் பேசவில்லை. இங்கிருக்கும் கமல், ரஜினியைவிட அஜீத் எவ்வளவோ பரவாயில்லை.  தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அஜீத்தை நான் விமர்சிக்கவில்லை. அஜீத்தின் ரசிகர்களைத்தான் சில கேள்விகளைக் கேட்டேன்.

அஜீத் தமிழர் அல்ல என்பது அனைவருக்கும்  தெரியும். ஆகவே அவரது ரசிகர்களை, மாற்று தேசிய இனத்தானை ஏன் தலைவராக ஏற்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதே போல விஜய்யையும் நான் விமர்சிக்கவில்லை. இலங்கையில் யுத்தம் நடந்து லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு விஜய் படம் வெளியாகிறது. சிலர், விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்கிறார்கள். அதை அங்கே பாதிக்கப்பட்ட மக்கள் தடுக்கிறார்கள். அதைத்தான் குறிப்பிட்டேன்.

அதாவது நடிகர்களுக்கு ரசிகராக இருந்தால், இன உணர்வு அற்றுப்போய்விடுகிறது என்பதைக் குறிப்பிட்டேன். மற்றபடி விஜய், அஜீத் என எவரையும் நான் விமர்சிக்கவில்லை.

ரஜினி கமலை நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்களே?

 ஆமாம். கூடங்குளம், ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டம், காவிரி பிரச்சினை என்று தமிழகத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் எதிலும் பங்கெடுக்காத நடிகர்களை அரசியலில் முன்னிறுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக விரும்புகிறது. இதன்  ஒரு பகுதிதான் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது. அதனால்தான் அவர்களை எதிர்க்கிறேன்.

 தாங்கள் பாஜகவின் பின்னணியில் இருந்து வருவதாக அவர்கள் சொல்லவில்லையே!

 அவர்கள் எப்படி வெளிப்படையாகச் சொல்வார்கள்? ஆனால் அவர்கள் பாஜகவின் வேறு வேறு முகங்கள்தான். ரஜினி ஆன்மிக முகம். கமல் பகுத்தறிவு முகம்.

ஆனால் இங்கே பாஜக காலூன்ற முடியாது. பெரியார் என்பவர் ஒரு நூற்றாண்டு காலமாக இங்கே களமாடியிருக்கிறார். பகுத்தறிவு பூமியாக தமிழ்நாட்டை மாற்றிவிட்டார். ஆகவே  இங்கே பாஜக காலூன்றமுடியாது.

ஆனாலும் இந்த இருவரும் பாஜகவினால் முன்னிறுத்தப்படுபவர்கள்தான். உதாரணமாக கமலை எடுத்துக்கொள்வோம்.

அவருக்குப் பின்னால் பாஜக இல்லை என்றால், மத்திய அரசை விமர்சித்து ஒரு வார்த்தை, சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எடப்பாடி காரணம் என்கிறார் கமல். எடப்பாடியா காரணம்..?

உச்சநீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது உச்சநீதிமன்றம். ஆனால் பாஜகவின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அதைக் கலைத்துவிட்டு  நாங்கள் வேறு அமைப்பு அமைப்போம் என்றார். அதை விமர்சிக்க கமலுக்கு தைரியம் இல்லையே.

மு.களஞ்சியம்

பாஜக இங்கே காலூன்ற முடியாது என்கிறீர்கள். உங்கள் வாதப்படி அவர்களது பின்னணியில் வரும் கமலும், ரஜினியும்கூட வெற்றி பெற முடியாதுதானே. பிறகு ஏன் கவலைப்பட வேண்டும். தவிர, ஒருவரை அரசியலுக்கு வந்த பிறகு எதிர்க்கலாம். ஆனால் அரசியலுக்கே வரக்கூடாது என எதிர்ப்பது என்ன நியாயம்?  

 இவர்கள் அயோக்கியர்கள். இவர்கள் மக்கள் மீது அன்புகொள்ளாதவர்கள். இவர்களுக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம்.

 அதாவது..

 பொறுங்கள். பாஜக என்ன திட்டத்தில் இருக்கிறது என்று சொல்கிறேன். இந்தியா முழுதும் பாஜகவின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களது திட்டம்.

அதற்காகத்தான் வாக்கு எந்திரத்தில் பாஜக மோசடி செய்து வருகிறது. இது அயோக்கியத்தனமானது. உலகம் முழுதும் இது வாக்கு எந்திரம் மோசடி  என புறக்கணித்துவிட்டார்கள். அதன் பிறகும் இந்த எந்திரத்தை கட்டிக்கொண்டு அழுகிறது பாஜக.  ஏன் என்றால்.. இதில் ஓட்டுப் போட தேவையில்லை. வெளியில் இரண்டு கிமி தூரத்தில் இருந்து  இயக்கலாம். உதாரணமாக திரிபுரா தேர்தலை எடுத்துக்கொள்வோம். அங்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் தொடர்ந்து முதல்வராக இருந்து வந்தார். மிகச்  சிறந்த முதல்வர். அவரை அந்த மக்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த வாக்கு எந்திரத்தில் மோசடி செய்து அங்கு பாஜக வென்றுவிட்டது.

ஆனால் உ.பி.யில் இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறதே.. வாக்கு எந்திரத்தில் மோசடி என்றால் அங்கேயும் செய்திருக்கலாமே?

 ஒரு மாநிலத்தின் அரசை கைப்பற்றவே அவர்கள் திட்டமிடுகிறார்கள். இடையில் வாக்கு எந்திரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக இடைத்தேர்தலில் மோசடி செய்யாமல் விட்டுவிட்டு தோற்பார்கள். எல்லாமே நாடகம்தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்கள் பயங்கரமான திட்டம் வைத்திருக்கிறார்கள்.

ரஜினி  மற்றும் கமலை  முன்னிறுத்தி இருக்கிறார்கள். கமல் பல ஊர்களுக்குச் சென்று பேசுகிறார். ரஜினி பேசவில்லை. தேர்தல் நெருக்கத்தில் தமிழகத்தில் பத்து இடங்களைத் தேர்வு செய்து ரஜினியை பேச வைப்பார்கள். அவரைப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அப்போது ஊடகங்களில் கருத்துக்கணிப்பு என்ற மோசடியை அரங்கேற்றுவார்கள். அதாவது ரஜினிக்குத்தான் கூட்டம் கூடுகிறது. அவரது கட்சிதான் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட வைப்பார்கள்.

நமது ஊடகங்களும் நேர்மையானவை அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியதை இருட்டடிப்பு செய்துவிட்டு, அந்த ஆலையின் பொய்யான அறிக்கையை விளம்பரமாக வெளியிட்ட ஊடகங்கள்தானே இவை.

ஆகவே ரஜினி வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகும். மக்களும் நம்புவார்கள். பிறகு வாக்கு எந்திரத்தில் மோசடி செய்து ரஜினியின் கட்சியை வெற்றிபெறச் செய்வார்கள்.

அவர்  முதல்வர் பதவியில் அமர்வார் சிறிது நாட்களில் ஜெயலலிதாவை எப்படி இரவோடு இரவாக காலி செய்தார்களோ அதே போல ரஜினியையும் காலி செய்துவிடுவார்கள். எச்.ராஜா போன்ற ஒருவர் முதல்வர் ஆவார்.

அதாவது ரஜினி கொல்லப்படுவார் என்கிறீர்களா?

 ஆம்.. நிச்சயமாக கொல்லப்படுவார். ரஜினி எவ்வளவு முட்டாளா இருந்தா என்ன.. அரசியல் தெரியாவிட்டால் என்ன.. ரஜினி மீது தமிழ் மக்கள் அன்பு வைத்திருக்கிறார்கள்.  அதை எப்படி பயன்படுத்தலாம் என பாஜக திட்டமிடுகிறது. இதை தமிழகத்தில் உணராதவர்  ரஜினிதான்.

சரி, இந்தக் கோணத்தில் ரஜினி சிந்தித்திருக்க மாட்டாரா..

அவர் அப்பாவி. அவர் இது குறித்து சிந்தித்திருப்பாரா என தெரியவில்லை.

சரி உங்கள் யூகத்தை சக திரைத்துறை கலைஞர் என்கிறமுறையில் ரஜினியிடம் சொல்லலாமே

கே: நான் தொடர்ந்து சில இடங்களில் இதைப் பற்றிப் பேசி வருகிறேன். அது ரஜினியின் கவனத்துக்கு சென்றதாக அறிகிறேன். மற்றபடி இதை நேரடியாக நான் சென்று சொல்ல வேண்டும் என்பது சரி வராது.

பேட்டி: டி.வி.எஸ். சோமு