சென்னை:  முன்னாள் சென்னை மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் நேற்று மாலை பாஜகவில் தன்னை இணைத்துக் கெண்டுள்ளார். அவரது இணைப்பு தொடர்பான போஸ்டரில் ரஜினி படம் இடம்பெற்றிருந்தது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.

சென்னையின் மாநகராட்சியின் முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சியின் மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் நேற்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். இவர், ரஜினியின் நெருக்கிய நண்பராகவும் இருந்து வந்தார். அதனால், அரசியல் கட்சிகளில் இருந்து விலகி,  ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த அரசியல் கட்சி மூலம் சேவையாற்ற காத்திருந்தார். அதற்காக அவ்வப்போது ரஜினியை சந்தித்து அரசியல் ஆலோசனைகளையும் நடத்தி வந்தார்.

ஆனால், அரசியலுக்கு வருவதாக மக்களையும், அவரது ரசிகர்களையும் பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த ரஜினி, கொரோனா மற்றும் தனது உடல்நலத்தை காரணம் காட்டி, அரசியலுக்கு முழுக்குப்போடுவதாகவும், தனது ரசிகர்கள் விரும்பிய கட்சிகளில் இணைந்துகொள்ளலாம் என அறிவித்துவிட்டு, எப்போதும்போல படம் நடிக்க சென்றுவிட்டார்.

ரஜினியை நம்பிக்கொண்டிருந்த தமிழருவி மணியன், கராத்தேதியாகராஜன் உள்பட அவரது நலன்விரும்பிகள், ரஜினியின் அறிவிப்பால் நொந்துபோய், மாற்றுக்கட்சிகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், ரஜினிக்காக குரல் கொடுத்த கராத்தே தியாகராஜன் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். நேற்று (11ந்தேதி) மாலை தனது ஆதரவாளர்களுடன்  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக மேலிட துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இணைந்துள்ளார்.

முன்னதாக பாஜகவில் இணைய இருப்பதாக, கராத்தே தியாகராஜன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ரஜினியின் படம் இடம்பெற்றிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசியலே வேண்டும் என்று கூறிய ரஜினியின் புகைப்படம் பாஜகவுக்கு ஆதரவாக போஸ்டரில் பதியப்பட்டிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஆன்மிகவாதியாக ரஜினி, பாஜக ஆதரவாளராகவே கருத்துப்பட்டு வருகிறார். இந்த நிலையில், கராத்தேவின் போஸ்டரில் அவர் படம் இடம்பெற்றது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.