நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது பல ஆண்டுகளாகவே விடை அறிய முடியமல் தொக்கி நிற்கும் கேள்வி.
அவ்வப்போது இது குறித்து பரபரப்பாக செய்தி பரவும். பிறகு காணாமல் போகும்.
அதென்னவோ, ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்போதுதான் இப்படியோர் செய்தி பரவும். தற்போது அவர் நடிக்கும் 2.0 திரைப்படம் பற்றி பரபரப்பாக பேசப்படுகிற நிலையில், “அரசியல் பிரவேசம்” பற்றியும் சீரியஸாக பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். பிறகு, “இது டிரைலர்தான், இனிமே தான் மெயின் பிக்சரை பார்க்கபோகிறீர்கள்” என்றார்.
ரஜினியோ, “ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை” என்று அறிவித்தார்.
இந்நிலையில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தை தயாரிக்கும் லைக்கை நிறுவனத்தின் அறக்கட்டளை, இலங்கையில் 150 வீடுகளை கட்டிக்கொடுத்தது. யாழ்ப்பாணத்தில் நடக்க இருந்த இதற்கான விழாவில் ரஜினி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று சில அரசியல் தலைவர்கள் வலியுறுத்த, தனது பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.
தனது பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து ரஜினி வெளியிட்ட அறிக்கை அவர் நேரடி அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற எதிர்பார்ப்பை கூடுதலாக்கிவிட்டது.
அந்த அளவுக்கு தேர்ந்த அரசியல்வாதியின் அறிக்கை போலவே அது இருந்தது. ஈழத்தமிழர்களுக்காக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதங்களில் மட்டுமே கலந்துகொள்ளும் ரஜினி, இந்த அறிக்கையில், “தங்கள் உரிமைகளுக்காக “புனிதப்போர்” நடத்தி உயிர்விட்டவர்கள் வாழ்ந்த பூமியை தரிசிக்க விரும்பினேன்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார்… ஒரு தேர்ந்த அரசியல்வாதிபோல!
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 12, 17 தேதிகளில் ரசிகர்களை ரஜினி சந்திக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் முன்னோட்டமாக நேற்று (ஏப்ரல் 2) அன்று சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் பொறுப்பாளர் சத்தியநாராயணா, ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது ரசிகர்கள், “தலைவர் தனிக்கட்சி துவக்குவாரா? பாஜகவி்ல் இணைவாரா?” என்று ஆர்வத்துடன் கேட்டிருக்கிறார்கள்.
சத்தியநாராயணாவோ, விரைவில் ரஜினி உங்களை சந்திக்கப்போகிறார். அப்போது இந்த கேள்விக்கு பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையே, தனது அரசியல் பிரவேசம் குறித்து தனக்கு நெருங்கிய அரசியல்வாதிகள் பலரிடம் தனித்தனியாக ஆலோசனை செய்துவருகிறார் ரஜினி என்று ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது.
ரஜினியை வளைக்க பாஜக முயற்சி எடுத்துவரும் நிலையில், இந்த சந்திப்புகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்பது உண்மைதான்.
அதே நேரம், ரசிகர்களை சந்தித்து படங்கள் எடுத்துக்கொண்டு, “ஜஸ்ட் சும்மா ஒரு சந்திப்பு” என்று சொல்லிவிடுவாரோ என்கிற சந்தேகமும் ஏற்படத்தான் செய்கிறது.
ரஜினி அப்படித்தான்.. அவரது பேச்சு மட்டுமல்ல. மவுனமும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. அவர் ராசி அப்படியா.. அல்லது நமது ராசி அப்படியா என்பது தெரியவில்லை.
ரஜினியின் அரசியல் குறித்து அவருக்கு நெருக்கமான யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தபோது உடனடியாக நினைவுக்கு வந்தவர் “பாலம்” கல்யாண சுந்தரம்.
இவரைப்பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும், சுருக்கமான அறிமுகம்.
நூலகராக பணிபுரிந்த கல்யாணசுந்தரம், தனது ஊதியம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்காக நன்கொடையாக அளித்தவர். இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க தன்னார்வ நிறுவனம் ஒன்று வழங்கிய 30 கோடி ரூபாயையும் நன்கொடையாக அளித்துவிட்டவர்.
இதைக் கேள்விப்பட்ட ரஜினி நெகிழ்ந்துபோய், கல்யாணசுந்தரத்தை தனது அப்பாவாக “தத்து” எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். தனது போயஸ் இல்ல வீட்டிலேயே தனி அறை ஒதுக்கி கல்யாணசுந்தரத்தை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். ரஜினியின் மனைவி லாதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோரும் கல்யாணசுந்தரம் மீது பாசத்தைப் பொழிந்தார்கள்.
ஆனால் ஒரு வருடத்திலேயே ரஜினியின் போயஸ் இல்லத்தைவிட்டு வெளியேறிவிட்டார் கல்யாண சுந்தரம்.
இதெல்லாம் நடந்து ஆண்டு பல ஆகிவிட்டன.
ஆனால் இப்போதும் ரஜினியுடனும் அவரது குடும்பத்தினருடனும் நெருக்கமான உறவு உண்டு கல்யாண சுந்தரத்துக்கு.
அவரிடம் பேசினோம்.
கண்களை மூடி மலரும் நினைவுகளுக்குள் மூழ்கியவர், பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார்: “ரஜினி குடும்பத்தினர் என்னை ராஜாவைப்போல் கவனித்துக்கொண்டனர். அங்கு எல்லா வசதிகளும் இருந்தன. ஒரு நாள் இருக்கும் உணவு மறுநாள் இருக்காது. விதவிதமான உணவுகள்.. ! தனி ஏசி அறை! பெரிய தொலைக்காட்சிப் பெட்டி!
இப்படி எல்லா வசதியும் இருந்தன. ஆனால் என்னால் அங்கு தொடர்நது இருக்க முடியவில்லை” என்று சிரிக்கிறார் கல்யாணசுந்தரம்.
அதற்கான காரணத்தையும் சொல்கிறார்: “ரஜினியின் போயஸ் இல்லத்துக்கு நான் சென்ற போதே, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், “ரஜினி பெரும் மக்கள் செல்வாக்கு உள்ளவர். அவருக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு. உங்களுக்கும் இது பொருந்தும்” என்றார்கள்.
அதாவது ரஜினியை சந்திக்க வருபவர்களை சோதனை செய்வார்கள். வந்தவர் யார் எவர் என்று ஆராய்வார்கள். பிறகு சந்திப்புக்கு ஒரு தேதி சொல்வார்கள்.
இதெல்லாம் எனக்கு சரிவராது. என்னை யாராவது சந்திக்க வேண்டும் என்று சொன்னால், “உங்களது நேரத்தைச் சொல்லுங்கள் அப்போது நான் எங்கிருக்கிறேன் என்பதைச் சொல்கிறேன். சந்திப்போம்” என்பேன்.
பிறகு, “ஆனாலும் ஒரு வருடத்துக்கு மேல் எனக்கு அங்கே இருக்க முடியவில்லை. ரஜினியிடம், “எல்லா வசதியும் உள்ள ஜெயிலாக இந்த வீடு இருக்கிறது. ஆகவே நான் போகிறேன்” என்றேன்.
ரஜினி, “ நல்லா சாப்பிடுங்க, தூங்குங்க, டிவி பாருங்க. இங்கேயே சந்தோஷமா இருங்க” என்றார்.
ஆனால் எனக்கு அது சரிவரவில்லை. நான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நினைப்பவன். அப்படி செய்வதானால் மக்களை சந்திக்க வேண்டுமே.. அப்படி மக்களை சந்திக்காமல் எப்படி சேவை செய்ய முடியும்?
என் சூழலை ரஜினியிடம் வலியுறுத்திச் சொன்னேன்.
ரொம்ப யோசித்து, சரி என்றார். அதோடு, தனது மனத்தாங்கலையும் சொன்னார்:
“கோடி கோடியா சம்பாதிக்கிறேன். ஆனா இந்த வாழ்க்கையில் எனக்கு விருப்பம் இல்லை.
காலாற பீச்ல நடக்கணும்.. காத்தாட பார்க்ல ஓடணும். கடைக்குப் போயி பொருள் வாங்கணும்.. டிரெய்ன்ல போகணும், பஸ்ல போகணும்னு நிறைய ஆசை இருக்கு.
ஆனா அதை நிறைவேத்திக்க முடியலை.
அவ்வளவு ஏன்.. ஒரு கல்யாண வீட்டுக்கு போக முடியல.. சின்ன பசங்களில் இருந்து வயது மூத்தவர்கள் வரை அத்தனை பேரும் என்னையே பார்க்கிறாங்க.. அத்தனை பேருக்கும் என்கிட்ட ஆட்டோகிராப் வாங்கிக்கணும்.. போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை
கல்யாணத்துக்கு போனமா, மணமக்களை வாழ்த்தினோமா சாப்பிட்டோமா திரும்பினோமா என்று இருக்க முடியாது. போனதில் இருந்து திரும்பும் வரை கூட்டத்துக்குள்ள தவிக்க வேண்டியிருக்கு..
நான் என்ன பெரிய தேவலோக தூதனா.? நிம்மதியா இருக்க விடுறாங்களா..
ஹூம்… எனக்கு வேற வழியே இல்லை.. என் தொழில் காரணமா சூழ்நிலை கைதியா வீட்டில அடைபட்டுக்கிடக்கிறேன்.
நீங்க சுதந்திரமா போயி இருங்க. தீபாவளி, பொங்கல் மாதிரி விசேசங்களுக்கு வாங்க. உங்க மகள் (லதா) பிறந்தநாள் பேத்திகள் பிறந்தநாள் வாங்க. 24 மணி நேரமும் இந்த வீடு உங்களுக்காக திறந்திருக்கும்”னு சொல்லி வழியனுப்பி வச்சாரு” என்கிறார் கல்யாணசுந்தரம்.
தனது அரசியல் பிரவேசம் பற்றி உங்களிடம் ரஜினி பேசியிருக்கிறாரா, அவர் அரசியலுக்கு வருவாரா என்று கேட்டதற்கு கல்யாணசுந்தரம் சொன்ன பதில்:
“ரஜினிக்கு அரசியல் என்பது சுத்தமாக பிடிக்காது! எந்தவொரு சூழலிலும் அவர் அரசியலுக்கு வரமாட்டார்!”