தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சற்று முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
சென்னை கோபாலபுரத்தல் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு வந்த ரஜினிகாந்தை, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். கிட்டதட்ட இருபது நிமிடங்கள் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு நிகழ்ந்தது.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கருணாநிதியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். அவரது உடல் நலன் குறித்து விசாரித்தேன். அரசியல் கட்சி துவங்க இருப்பதைச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கினேன்” என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த சந்திப்புக்கு இருகாரணங்கள் அரசியல் வட்டாரத்தில் உலவுகின்றன.
கட்சி துவங்கியதாக அறிவித்த ரஜினிகாந்த், தான் ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்தார். மேலும் பாபா முத்திரையை தனது சின்னம் என்று பிறர் கருதும் அளவுக்கு முன்னிலைப்படுத்தி வருகிறார். மேலும் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று அங்கிருந்த சாமியார்களிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
இதையடுத்து, “மத ரீதியான அரசியல் செய்ய விழைகிறார் ரஜினி” என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த விமர்சனத்தை மடை மாற்றும் நோக்கோடு, பகுத்தறிவாதி என்று அறியப்படும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்திருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
அதே நேரம் வேறு ஒரு கருத்தும் உலவுகிறது. கட்சி அறிவிப்பு குறித்து பேசும்போது, 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்திலின் போது தான் கொடுத்த வாய்ஸ் பற்றியும் நினைத்திருந்தால் அப்போதே பதவி பெற்றிருக்க முடியும் என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
அதாவது அந்தத் தேர்தலில் ஜெயலிலிதாவின் அதிமுகவை எதிர்த்து கருணாநிதியின் திமுகவை ரஜினி ஆதரித்தார். அத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரு வெற்றி பெற்றது.
இதற்குக் காரணம் தான்தான் என்பது போல் ரஜினி தெரிவித்த வருவதாகவும், ஆனால் 91 – 96 வருட ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அவர் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பால்தான் திமுக கூட்டணி வென்றது என்றும் பலரும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் திமுகவினர்.
ஆகவே இதனால்கூட கருணாநிதியை ரஜினி சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.