அமெரிக்காவில் ஓய்வெடுத்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த “கபாலி” திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. .இந்தப்பட வேலைகள் நிறைவடைந்த உடன் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் அவரது உடல்நிலை பற்றிய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. அதை ரஜினி குடும்பத்தினர் மறுத்து அறிக்கை வெளியிட்டனர்.
அதே போல் ரஜினி அவரது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவில் கோவிலில் வழிபடுவது, திரையரங்கு ஒன்றில் “கபாலி” சிறப்பு காட்சியை பார்ப்பது உள்ளிட்ட புகைப்படங்களும், ரஜினி அங்கே தனியாக வாக்கிங் செல்வது போன்ற வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியானது .
இந்நிலையில் நேற்று (ஞாயிறு) இரவு 7.30 மணி அளவில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வழக்கம்போல், பத்திரிகையாளர்களி் கூடியிருந்தனர். வழக்கம்போல் ரஜினி எதுவும் பேசவில்லை. அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.
இன்று, அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
கபாலி படம், பற்றி எதிர்மறை விமர்சனங்கள் அதிக அளவில் சமூகலைதளங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தவிர, படத்தின் விற்பனையில் தயாரிப்பாளர் தாணுவுக்கும் விநியோகஸ்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நெல்லை உள்ளிட்ட சில பகுதிகளில் கபாலி படம் திரையிடப்படவில்லை.
மேலும், மிக அதிக விலைக்கு கபாலி பட டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு டிக்கெட் மூன்று ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது அனைத்துத் தரப்பினரையும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. கூடுதல் பணத்துக்கு கணக்கு என்ன, இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரஜினி மீதும், கபாலி பட தயாரிப்பாளர் தாணு மீதும் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.
இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவை ரஜினி சந்திப்பார் என்று ஒரு தகவல் பரவியிருக்கிறது.
இந்த படத்தின் விநியோகத்தை பெற்றுள்ள ஜாஸ் நிறுவனம், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமானது. என்பது குறிப்பிடத்தக்கது.