வாஷிங்டன்:
வட அமெரிக்காவில் மே 6-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவதாகவும் கட்சி துவங்கி தனித்து போட்டியிடப்போவதாகவும் கடந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். இதையடுத்து புத்தாண்டு அன்று ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார். இதற்கு உறுப்பினர்களை சேர்க்கும்படி, மன்றத்தினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தமிழ்நாடு முழுதும் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
ரஜினிகாந்துக்கு மலேசியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் வட அமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட உள்ளது. வாஷிங்டன் டிசியில் வரும் 6-ஆம் தேதி மாலை 3 மணிக்கு இந்த திறப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.