சென்னை:
தனது இரு கால்களையும் ரயில் விபத்து ஒன்றில் இழந்த ரசிகருக்கு நடிகர் ரஜினிகாந்த் நிதி உதவி வழங்கி அவரது குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மதுரையில் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 33). சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் பயணம் செய்த போது, செங்கல்பட்டு அருகே படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததால் பலத்த அடிபட்டார். அவருடைய ஒரு கால் ரயில் சக்கரத்தில் மாட்டி விபத்து நடந்த இடத்திலேயே துண்டானது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் காசி விஸ்வநாதன் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். விபத்தில் அவருடைய இன்னொரு காலும் மிகவும் அடிபட்டு குணப்படுத்த முடியாத நிலையில் இருந்தததால் அந்தக் காலும் அகற்றப்பட்டது. இந்த விஷயம் நடிகர் ரஜினிகாந்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து அறிந்த ரஜினிகாந்த் மிகவும் வருந்தினார். அவர் உடனடியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகரை தன் சார்பில் அனுப்பி வைத்தார். சுதாகருடன் தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ராமதாசும் உடன் சென்றுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காசி விஸ்வநாதனை நேரில் சென்று சுதாகர் பார்வையிட்டார்.
அத்துடன் சுதாகர் மருத்துவரிடம் காசி விஸ்வநாதனுடைய உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். காசி விஸ்வநாதனின் பெற்றோர்கள் மற்றும் மனைவியிடம் ரஜினி சார்பில் நிதி உதவி வழங்கிய சுதாகர் தனது தொலைபேசி எண்ணை அளித்துள்ளார் மேலும் காசி விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக சுதாகர் வாக்குறுதி அளித்துள்ளார்.