சென்னை:

ரஜினியின் தர்பார் படம் வெற்றியடைய சிறுவனுக்கு அலகு குத்தி ரஜினி ரசிகர்கள் அலப்பறை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜினி நடித்துள்ள தர்பார் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், படம் வெற்றிபெற வேண்டி ரஜினி ரசிகர்கள்  அலகு குத்தியும் மண்சோறும் சாப்பிட்டு வேண்டுதல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் சில கோவில்களில்  அலகு குத்தியும், மண் சோறு சாப்பிட்டும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மதுரையில் சிறுவன் ஒருவனுக்கு அலகு குத்தி  ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்த காட்சி  தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மிக அரசியலுக்கு வருவதாக அறிவித்து, தனது ரசிகர்களை ஏமாற்றி, படத்தை வெற்றியடைய செய்து, கோடிக்கணக்கில் பணத்தை குவித்து வரும் ரஜினி, தற்போது, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், நயன்தாராவுடன் இணைந்து தர்பார் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சேலத்தில் படம் வெளியிடப்படும் தியேட்டர் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவ ரஜினி ரசிகர்கள் அனுமதி கோரியுள்ள நிலையில், தற்போது கோவில்களில் வேண்டுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு ஜெயமணி என்பவர் வேல் குத்தியும்; முருகவேல், கோல்டன் சரவணன் என்பவர் மண் சோறு சாப்பிட்டும் தர்பார் படம் வெற்றி அடைய வேண்டி  பிரார்த்தனை செய்துள்ளனர்.

ரஜினி படம் வெற்றிபெற வேண்டிய சிறுவன் ஒருவருக்கு அலகு குத்திய காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி அரசுக்கு ஆதரவாகவும், சமூக பிரச்சினைகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும், ரஜினி, சிறு குழந்தைக்கு அலகு குத்தப்பட்டது குறித்து என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்…