ரஜினியை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது!

Must read

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்கள், “ரஜினியை ஏன் விமர்சிக்கறோம்..? வெரி சிம்பிள்” என்ற  தலைப்பி்ல் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:

ண்மையில் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரஜினியின் ஒரே பதில், நோ பாலிடிக்ஸ் ப்ளிஸ்..

ஆனால் இவர்மட்டும் இவருக்குதேவைப்படும்போது அரசியல் பேசுவார்.. அதை எல்லோரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.. போகட்டும் அந்த காமெடிய விட்டுத்தள்ளுவோம்..

குடிமகன் என்ற முறையில் சாதி, மதம், இனம், தொழில் என எந்த பாகுபாடுமின்றி யாவரும் அரசியலில் நுழையலாம்.. அதனால் ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம். அவரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை..

அப்புறம், தமிழ்நாட்டுக்கு ரஜினி என்ன செய்தார் என்று கேட்பதெல்லாம் அர்த்தமற்ற ஒன்று. அவர் ஒரு நடிகர். அவர் தொழிலை அவர் பார்க்கிறார். அப்படி பார்த்ததால் தமிழ்நாட்டில் பெரும் அளவில் வியாபார ரீதியாக சம்பாதிப்பவர்கள் தமிழ்நாட்டு என்ன செய்தார்கள் என்றா கேட்டுக்கொண்டிருக்கிறோம்..?

ஒருவர் அரசியலுக்கு வருவதற்குமுன் எதையாவது செய்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.. பெரும்பாலானோர் திடீரென அரசியலில் நுழைந்து அதன் பிறகே தேசப்பணியை முழுவீச்சில் மேற்கொண்டவர்கள்தான்.

ரஜினியை பொறுத்தவரை பிரச்சினை என்னவென்றால், திடீர் திடீரென சைடு கேப்பில் அரசியல் பேசிவிட்டு அப்படியே ஓடிவிடுவது. விளையாடித் தொலையட்டும்..அவரை லைம் லைட்டில் வைத்திருக்க தவிர்க்க முடியாத சூழ்நிலை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்..

ஒன்று, ”அரசியலுக்கு வந்தே தீருவேன் என்று சொல்லவேண்டும்..இல்லையென்றால் எக்காலத்திலும் அரசியலுக்கு வரவேமாட்டேன்.. அரசியலுக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என பொட்டில் அறைந்தாற்போல சொல்லவேண்டும்.. அப்படியும் சொல்லமாட்டேன் என்கிறார்..

நான் அரசியலுக்கு வருவேனே மாட்டேனா என்பது நாளை ஆண்டவன் போடும் உத்தரவில்தான் இருக்கிறது என்று சொல்கிறார்..இதையே இருபதாண்டுகளுக்கும் மேலாக சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தேய்ந்த ரிக்கார்ட்போல் சொல்லிவருகிறார். குறிப்பாக அவரின் புதுப்படத்தின் பஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் போன்றவை வருவதற்கு முன்பே இந்த தேய்ந்த ரெக்கார்டு வந்து ஓட ஆரம்பித்துவிடுகிறது.. ஒரு வேளை ஆண்டவன் வந்து கடைசிவரை சொல்லவே மாட்டான் என்பதில் அதிகமாக நம்பிக்கை கொண்டவராக இருப்பார் போல.

இன்னைக்கு காலையில் கொஞ்சம் டெவலப் ஆகி,போர் வரும் போது களத்தில் இறங்குவேன் இந்த மண்ணுக்காக; அதுவரை பொறுமை காப்போம் என்று ரசிகர்கள் மத்தியில் உசுப்பேற்றியிருக்கிறார்

இன்னொரு பக்கம் அரசியல்வாதிகள் தன்னை பயன்படுத்திக்கொள்வதாக புலம்புவது.. அவர்கள் வந்து சந்திப்பதற்கு நீங்கள் ஏன் அனுமதி கொடுக்கறீர்கள்…. அப்படியே தனிப்பட்ட சந்திப்பு என்றாலும் போட்டோ எடுத்து வெளியிடவேண்டாம் என்று நாகரீகமாக சொல்லிவிட்டு போகவேண்டியதுதானே..

பிரதமர் முதல் பேட்டை பிஸ்தாவரை எல்லா அரசியல்வாதிகளும் என் நட்பில் உள்ளவர்கள் என தொடர்ந்து சீன் போடுவது ஏன்? கருணாநிதி, எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோர் மரியாதை வைத்து நெருங்கிப்பழகிய, பாரம்பரியம்மிக்க பெரிய குடும்பங்கள் தமிழகத்தில் இன்றும் நிறைய உண்டு..அவர்களெல்லாம் என்றைக்கும் அந்த நெருக்கத்தை வெளிக்காட்டிக்கொண்டதில்லை

குன்ஹா தீர்ப்பின்படி தண்டனை கைதியாக சிறை சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவுக்கு அவசரமாக வாழ்த்துச்செய்தி? இதெல்லாம் என்ன மாதிரியான காரியம்….? பாசம் என்பதைவிட பயம் என்பதைத்தானே அப்பட்டமாக காட்டியது. உண்மையிலே அரசியல் கிடையாது,,,நிஜமான அக்கறைதான் என்றால் ஜெயலலிதாவிடம் போனில் நலம் விசாரித்துவிட்டு கமுக்கமாக போகவேண்டியதுதானே?

இஷ்டத்துக்கும் திட்டவேண்டியது.. பதவியேற்பு விழான்னு வந்தா போய் முதல் வரிசையில் அமர்ந்துகொள்வது..இதெல்லாம் என்ன? அனைவருக்கும் நல்ல தோழனாக காட்டிக்கொள்வது என்பதன் அர்த்தம் தானே இது? அரசியலுக்கு தேவையில்லாத முதல் கோட்பாடே இதுதான்.. எதிரின்னா எதிர்த்து நின்னு தைரியமா அரசியல் செய்யணும்..

நாம நல்லா இருக்கணும்னா எதைப்பத்தியும் கவலைப்படக்கூடாது..மத்தவங்க நல்லா இருக்கணும்னா நம்மை பத்தி யோசிக்கவேகூடாது.. அப்பத்தான் எதையாவது உருப்படியாக செய்யமுடியும்..

அரசியலுக்கு வாங்க..உங்க திறமையை, மக்கள் நல சிந்தனையை காட்டுங்க… இல்லைன்னா வரமாட்டேன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருங்க..ஆனா ஆனா ஆண்டவனை காட்டி கொழப்பாதீங்க.. ஆண்டவன் எல்லா நேரத்திலும் பொறுமையான மூடுல இருப்பான்னு சொல்லமுடியாது..அவனே டென்ஷன் ஆயிட்டான்… அதே ஆண்டவனாலேயே உங்கள காப்பாத்த முடியாது..

More articles

Latest article