சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவலை தடுப்பது குறித்து கடந்த சில நாட்களாக தமிழக புதிய தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆனால், ஆலோசனையின் முடிவுகள் என்ன, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல், ஆலோசனை… ஆலோசனை என்று பெயரில் நாட்களை கடத்தி வருகிறார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இக்கட்டான இந்த சூழலில், முடிவுகள் எடுப்பதில், தலைமைச்செயலாளர் தடுமாறுவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவல் 11,000 ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 3,750 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதிக்க போதிய படுக்னை வசதிகள் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது. பல மருத்துவமனை, மற்றும் கோரோனா சிகிச்சை மைதயங்களில், ஆக்ஸிஜன் வசதி செய்யப்படாத நிலை உள்ளது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதுபோல தடுப்பூசியும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், தமிழகத்தில் இருந்து, ஆக்சிஜன் மற்றும், ரெம்டெசிவிர் மருந்துகளை தமிழகஅரசின் அனுமதியின்றி மத்தியஅரசு, மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திலும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்த கேள்வி எழுப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் இதுனுகுறித்து தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய, தமிழக அரசை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் தேர்தல் நடத்தப்பட்டதே என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதைத் தொடர்ந்தே தொற்று பரவல் உச்சநிலை அடைந்துள்ளது. ஆனால், தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய தமிழகஅரசு, தேர்தல் நடைமுறை சிக்கல்களால் கடந்த ஒரு மாதமாக, பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகாரிகள் கொரோனா விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதில் மிகவும் யோசித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த வாரம், தமிழக முதல்வர் தலைமையில் அவசர கூட்டம் நடத்தி, இரவு மற்றும் ஞாயிறு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச்செயலாளார் தினசரி ஒரு ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மட்டுமின்றி மத்தியஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தொற்று முழு ஊரடங்கு குறித்து மதத்தலைவர்களுடனும், காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தியதுடன் இன்று மீண்டும் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் தமிழக சுகாதாரத்துறைச் செயலர், வருவாய்த்துறை ஆணையர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தமிழகத்தல் மாநிர அரசு முடங்கியுள்ள நிலையில், திறமையாக பணியாற்ற வேண்டிய தலைமைச்செயலாளர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வரும் தலைமைச்செயலாளர் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. குறைந்த பட்சம் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தகவல்களை வெளியிடப்படாமல் அமைதி காக்கப்பட்டு வருகிறது.
தொற்று பரவலை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், தடையை மீறி திருமணம் உள்பட ஏராளமான நிகழ்ச்சிகளில், பாதுகாப்பு நெறிமுறைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், காவல்துறையோ, சுகாதாரத்துறையோ கண்டுகொள்ளாத நிலையே தொடர்கிறது.
தற்போதைய சூழலில், தமிழகத்தின் தலைமை அதிகாரியாக தலைமைச்செயலாளரே இருந்து வருகிறார். அவரே நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்வில் விளையாடுவதை விட்டுவிட்டு, அவர்களை காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால், ராஜீவ் ரஞ்சனோ, மீட்டிங் என்ற பெயரில் நாட்களை மட்டுமே கடத்திக்கொண்டிருக்கிறார். மக்களிடையே தொற்று பவரலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவதாகவும், அடுத்து அமைய இருக்கும் ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதே நிலையில், நீடித்தால், கொரோனா பரவல் வெளிநாடுகளை போல எல்லைமீறி சென்றுவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.
மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் தொற்று பரவல் எல்லைமீறிச் சென்றால், அதற்கு தலைமைச்செயலாளரும் ,சுகாதாரத்தறை செயலாளருமே பொறுப்பேற்க வேண்டிய வரலாற்று பிழை உருவாகி விடும்…