ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை எதிர்த்து அம்மாநில சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளார்
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் பதவி வகித்த சச்சின் பைலட் இடையே மோதல் எழுந்தது. அதையொட்டி சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும் சபாநாயகர் சச்சின் உள்ளிட்ட 19 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து நோட்டிஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணை மாலை வரை முடியாததால் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை அதாவது 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அத்துடன் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதையொட்டி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு திருப்தி கரமாக இல்லை என்பதால் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.