ஜெய்ப்பூர்: கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அளிக்கும் விஷயத்தில், இந்தியாவிலேயே, ராஜஸ்தான் மாநிலம்தான் சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு நற்சான்று வழங்கியுள்ளது.
WHO அமைப்பு நிர்ணயித்த அனைத்து வகைப்பாட்டின் கீழும், ராஜஸ்தான் அரசின் செயல்பாடுகள் பச்சை குறியீட்டு அடையாளத்தைப் பெற்றுள்ளன. வேறுபல மாநிலங்கள் ஒருசில வகைப்பாடுகளில் மட்டுமே இந்தக் குறியீட்டைப் பெற்றிருக்கும் நிலையில், ராஜஸ்தான் அரசோ, நிர்ணயிக்கப்பட்ட அனைத்திலுமே அந்தக் குறியீட்டைப் பெற்றுள்ளதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது, போக்குவரத்து வசதிகள், மருந்துகளை வைப்பதற்கான குளிர்சாதன வசதிகள், விநியோகத் திட்டம் மற்றும் அடைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ராஜஸ்தான் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக சென்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரையறுக்கப்பட்ட சமூக இடைவெளி, உபகரணங்கள் கிடைப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.