ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஆண்டு முதல் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை, பெற்றொரை வணங்கும் தினமாக கொண்டாட அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும், பிப்ரவரி 14ஆம் தேதி   காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காதலர் தினத்தை பெற்றொரை வணங்கும் தினமாக அனுசரிக்க, ராஜஸ்தான் மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.  மேலும் கல்வித்துறையில் பின்பற்றப்படும் காலண்டரில் இதை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 14-ந் தேதியை பெற்றோர் தினமாக கொண்டாட வேண்டும். அன்றைய தினத்தில் மாணவ, மாணவிகள், தங்கள் தாய், தந்தையரை பள்ளிக்கு அழைத்து வந்து பூஜை செய்ய வேண்டும்.

மேலும் பெற்றொர்களை கவுரப்படுத்தும் விதமாக பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும். தற்போதைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.  இதைத் தடுத்து இந்திய கலாச்சாரத்தை மீட்டெடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ராஜாஸ்தான் மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாசுதேவோ தேவ்னானி, “ கலாச்சாரம், ஒழுக்கம் மற்றும் பெற்றோரின் மீதான அன்பை குழந்தைகளின் மனதில் பதிய வைக்க இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று  தெரிவித்தார்.