ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார்.
இது தொடர்பான வழக்கில் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
அதை தொடர்ந்து, ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார். 2 வாரங்களாக அதிருப்தி எம்எல்ஏக்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை 3வது முறையாக அசோக் கெலாட் ஆளுநரை சந்தித்துள்ளார்.
இந் நிலையில், அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதலமைச்சருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  பேரவை நடத்த கூடாது என்பது தமது நோக்கம் அல்ல என்று ஆளுநர் கூறி உள்ளார்.