ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் முதல்வர் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், அரசுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின் பேரில், 19 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
ஆளுநர் மாளிகை வளாகத்தில் கூடிய எம்எல்ஏக்கள், சட்டசபை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, பின்னர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து,
ஜூலை 27 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்கும்படி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடையே முதல்வர் கெலாட், சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாக ஆளுநர் தனது முடிவை அறிவிக்கவில்லை என்றவர், ஆளுநர் அனுமதி அளித்ததும், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும், ஆனால், மேலிட அழுத்தத்தின் கீழ் ஆளுநர் செயல்படுவதாகவும், அதனால்தான் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கான உத்தரவை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.